/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
20 ஓவரில் 349 ரன் * பரோடா அணி உலக சாதனை
/
20 ஓவரில் 349 ரன் * பரோடா அணி உலக சாதனை
UPDATED : டிச 06, 2024 09:28 AM
ADDED : டிச 05, 2024 10:59 PM

இந்துார்: 'டி-20' கிரிக்கெட்டில் 349 ரன் குவித்து உலக சாதனை படைத்தது பரோடா அணி.
இந்தியாவில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டி-20' தொடர் நடக்கிறது. இந்துாரில் நடந்த போட்டியில் பரோடா, சிக்கிம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பரோடா பேட்டிங் தேர்வு செய்தது.
பரோடா அணிக்கு ஷாஷ்வத் (16 பந்து, 43 ரன்), அபிமன்யுசிங் (17ல் 53) நல்ல துவக்கம் தந்தது. ஷிவாலிக் 17 பந்தில் 55 ரன் எடுக்க, விஷ்ணு 16 பந்தில் 50 ரன் எடுத்தார். பரோடா அணி 10.5 ஓவரில் 202 ரன் குவித்தது.
மறுபக்கம் சிக்சர் மழை பொழிந்த பானு புனியா, 42 பந்தில் சதம் விளாசினார். பரோடா அணி 20 ஓவரில் 349/5 ரன் குவித்து, புதிய உலக சாதனை படைத்தது. பானு புனியா (51 பந்து, 134 ரன், 15x6, 5x4) அவுட்டாகாமல் இருந்தார்.
பின் களமிறங்கிய சிக்கிம் அணிக்கு பார்த் (12), ராபின் (20), கேப்டன் லீ யாங் லெப்சா (10), அன்குர் மாலிக் (18) கைகொடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. சிக்கிம் அணி 20 ஓவரில் 86/7 ரன் எடுத்தது. பரோடா அணி 263 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரன் அடிப்படையில் இது நான்காவது சிறந்த வெற்றியானது.
இது 'பெஸ்ட்'
நேற்று 349/5 ரன் எடுத்த பரோடா, 'டி-20' அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த அணியானது. முன்னதாக ஜிம்பாப்வே அணி காம்பியாவுக்கு எதிராக 344/4 ரன் (2024) எடுத்ததே அதிகம்.
'டாப்-4' ரன் விபரம்
அணி எதிரணி ஆண்டு ரன்
பரோடா சிக்கிம் 2024 349/5
ஜிம்பாப்வே காம்பியா 2024 344/4
நேபாளம் மங்கோலியா 2023 314/3
இந்தியா வங்கதேசம் 2024 297/6
28 பந்தில் சதம்
சவுராஷ்டிராவில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணி (144/3), மேகாலயாவை (142/7) 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் பஞ்சாப் வீரர் அபிஷேக் சர்மா (106 ரன்), 11x6, 8x4), 28 பந்தில் சதம் விளாசினார்.
* 'டி-20' கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் வரிசையில் முதலிடம், ஒட்டுமொத்த 'டி-20'ல் இரண்டாவது இடத்தை, உர்வில் படேலுடன் (28 பந்து) பகிர்ந்து கொண்டார் அபிஷேக் சர்மா.
* 27 பந்தில் சதம் அடித்த எஸ்தோனிய வீரர் சாஹில் சவுகான் (எதிர்-சைப்ரஸ், 2024) முதலிடத்தில் உள்ளார்.
'டாப்-5' வீரர்கள் விபரம்
வீரர்/அணி எதிரணி ஆண்டு பந்து
சாஹில்/எஸ்தோனியா சைப்ரஸ் 2024 27
உர்வில்/குஜராத் திரிபுரா 2024 28
அபிஷேக்/பஞ்சாப் சிக்கிம் 2024 28
கெய்ல்/பெங்களூரு புனே 2013 30
ரிஷாப்/டில்லி இ.பி., 2018 32
37 சிக்சர்
'டி-20'ல் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த அணி என உலக சாதனை படைத்தது பரோடா (37 சிக்சர்). அடுத்த இடத்தில் ஜிம்பாப்வே (27) உள்ளது.
தமிழகம் ஆறுதல்
இந்துாரில் நடந்த மற்றொரு போட்டியில் தமிழக அணி (194/5), உத்தரகாண்ட்டை (100/10) 94 ரன் வித்தியாசத்தில் வென்றது. தமிழகத்தின் ஜெகதீசன் 57, துஷார் 55 ரன் எடுத்தனர். தமிழக 'டி-20' அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர் ஆனார் ஜெகதீசன் (10). மொத்தம் பங்கேற்ற 7 போட்டியில் 3ல் மட்டும் வென்ற தமிழகம், காலிறுதி வாய்ப்பை இழந்து, பட்டியலில் 5வது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.