/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் * எளிதாக வென்றது நியூசிலாந்து
/
இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் * எளிதாக வென்றது நியூசிலாந்து
இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் * எளிதாக வென்றது நியூசிலாந்து
இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் * எளிதாக வென்றது நியூசிலாந்து
ADDED : அக் 04, 2024 11:11 PM

துபாய்: 'டி-20' உலக கோப்பை முதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து பிரிவிலும் ஏமாற்றினர். நியூசிலாந்து அணி 58 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.சி.சி., சார்பில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, நேற்று தனது முதல் போட்டியில் வலிமையான நியூசிலாந்தை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சோபி, பேட்டிங் தேர்வு செய்தார்.
சறுக்கிய பீல்டிங்
நியூசிலாந்து அணிக்கு சுஜீ பேட்ஸ், ஜார்ஜியா ஜோடி வேகமாக துவக்கம் கொடுத்தது. பூஜா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் சுஜீ. மறுபக்கம் தீப்தி வீசிய 3வது ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார் ஜார்ஜியா. அருந்ததி பந்தில் சுஜீ கொடுத்த எளிய 'கேட்ச்' வாய்ப்பை நழுவவிட்டார் விக்கெட் கீப்பர் ரிச்சா. நியூசிலாந்து அணி 'பவர் பிளே' ஓவர் முடிவில் 55/0 ரன் எடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது, அருந்ததி பந்தில் அவுட்டானார் சுஜீ (27). ஆஷா ஷோபனா வீசிய அடுத்த ஓவரில் ஜார்ஜியா (34) வீழ்ந்தார். அமேலியா, 22 பந்தில் 13 ரன் எடுத்தார். புரூகே 12 பந்தில் 16 ரன் எடுத்து, ரேணுகா பந்தில் அவுட்டானார். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோபி, அரைசதம் அடித்தார்.
நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன் குவித்தது. சோபி (57), மேடி (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ரேணுகா 2, அருந்ததி, ஆஷா தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
விக்கெட் சரிவு
கடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷபாலி (2), மந்தனா (12) மோசமான துவக்கம் கொடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (15), ஜெமிமா (13) ரிச்சா (12) விரைவில் அவுட்டாக, தோல்வி உறுதியானது. பூஜா (8), ஸ்ரேயாங்கா (7) நிலைக்கவில்லை. இந்திய அணி 19 ஓவரில் 102 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.
ரன் அவுட் குழப்பம்
போட்டியின் 14 வது ஓவரின் கடைசி பந்தை தீப்தி வீசினார். அமேலியா ஒரு ரன் எடுத்தார். ஓவர் முடிந்து விட்டதால் அம்பயர், தொப்பியை தீப்தியிடம் கொடுத்தார். ஆனால் சோபி இரண்டாவது ரன்னுக்கு ஓடிவர, அமேலியாவும் ஓடினார். இதற்குள் ஹர்மன்பிரீத் துல்லியமாக எறிந்த பந்தை பெற்ற ரிச்சா, அமேலியாவை ரன் அவுட் செய்தார்.
உடனே அமேலியா பெவிலியன் திரும்பினார். ஆனால், நான்காவது அம்பயர், இது அவுட் இல்லை என்றார். இதுகுறித்து ஹர்மன்பிரீத் கவுர், அம்பயர்களுடன் நீண்ட நேரம் விவாதித்தார். ஆனால்,'ஓவர் முடிந்து விட்ட பிறகு, ரன் எடுக்க ஓடியதால், பந்து 'டெட் பால்' ஆகி விட்டது. இதனால் அவுட் இல்லை,' என தெரிவிக்கப்பட்டது. அம்பயரின் முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
விதி என்ன
ஐ.சி.சி., விதி 20.1.1.1, 20.1.1.2 ன் படி, பந்து விக்கெட் கீப்பர் அல்லது பவுலர் கையில் வந்த பிறகு தான், அது 'டெட் பால்' எனப்படும். இங்கு பந்து பீல்டர் (ஹர்மன்பிரீத் கவுர்) கையில் தான் இருந்தது. பேட்டர்கள் ரன் எடுக்க ஓடினர். ஆனால் அம்பயர் எப்படி பந்து 'டெட் பால்' என அறிவித்தார் என்பது குழப்பமாக இருந்தது.
தென் ஆப்ரிக்கா அசத்தல்
நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹேலி மேத்யூஸ் (10) ஏமாற்றினார். டாட்டின் (13) நிலைக்கவில்லை. 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன் மட்டும் எடுத்தது. தனிநபராக போராடிய ஸ்டாபானி டெய்லர் (44), ஜைதா ஜேம்ஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் மலபா 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின் சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா வால்வார்ட் (59*), டாஸ்மின் பிரிட்ஸ் (57*) அரைசதம் விளாச, 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 119 ரன் எடுத்து வென்றது.