/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஒரே ஓவரில் 39 ரன் * 'டி-20' அரங்கில் உலக சாதனை
/
ஒரே ஓவரில் 39 ரன் * 'டி-20' அரங்கில் உலக சாதனை
ADDED : ஆக 20, 2024 11:38 PM

அபியா: சர்வதேச 'டி-20' அரங்கில் ஒரே ஓவரில் 39 ரன் விளாசி உலக சாதனை படைத்தார் சமோவா வீரர் டேரியஸ் விஸ்செர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 2026 தொடருக்கான, கிழக்கு ஆசிய பசிபிக் மண்டல தகுதிச்சுற்று போட்டி சமோவாவில் நடந்தது. இதில் சமோவா-வனுவாட்டு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சமோவா அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
டேரியஸ் அபாரம்
சமோவா அணியை துவக்கத்தில் சீன் காட்டர் (1), டேனியல் (5) ஜோடி கைவிட்டது. முதல் 18 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஜாஸ்மத் (16) இரட்டை இலக்க ரன் எடுத்தார். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் வேகமாக ரன்குவித்தார் டேரியஸ் விஸ்செர்.
சாதனை எப்படி
தனது மூன்றாவது போட்டியில் களமிறங்கிய 28 வயதான இவர், நிபிகோ வீசிய 15வது ஓவரை எதிர்கொண்டார்.
* முதல் 3 பந்தில் 6, 6, 6 என 18 ரன் விளாசினார்.
* 4வது பந்து 'நோ பால்' ஆனது. 'பிரீ ஹிட்' பந்தில் சிக்சர் (1 நோ பால், 6) அடித்தார் விஸ்செர்.
* 5 பந்தில் ரன் எடுக்கவில்லை (0).
* 6வது பந்து நோ பால். 'பிரீ ஹிட்டாக' வீசப்பட்ட பந்தும், நோ பால் ஆக, இதில் விஸ்செர் சிக்சர் அடித்தார்.
* மறுபடியும் சரியாக வீசிய 6வது பந்தில், மற்றொரு சிக்சர் அடித்தார் விஸ்செர். 6வது பந்தில் மட்டும் (1 நோ பால், 1 நோ பால்+6, 6) 14 ரன் எடுக்கப்பட்டன.
* 15வது ஓவரில் மொத்தமாக விஸ்செர் 39 ரன் (36+3 உதிரி) எடுத்தார். 'டி-20' அரங்கில் இது புதிய சாதனையாக அமைந்தது.
தொடர்ந்து அசத்திய விஸ்செர், 51 வது பந்தில் சதம் கடந்தார். இவர் 62 பந்தில் 132 ரன் (14X6, 5X4) எடுத்து அவுட்டானார். சமோவா அணி 20 ஓவரில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
நிபிகோ ஆறுதல்
அடுத்து களமிறங்கிய வனுவாட்டு அணிக்கு மன்சேல் (22), கேப்டன் ஜோசுவா ராசு (23), கட்லர் (21) சற்று உதவ, நிபிகோ 73 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். வனுவாட்டு அணி 20 ஓவரில் 164/9 ரன் மட்டும் எடுத்தது. சமோவா அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
யார் 'டாப்'
சர்வதேச 'டி-20' அரங்கில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த முதல் வீரர் யுவராஜ் சிங். 2007 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்தின் பிராட்டுக்கு எதிராக இதுபோல சாதித்தார். இதுவரை 5 முறை ஒரே ஓவரில் 36 ரன் விளாசப்பட்டன.
ஒரே ஓவரில் அதிக ரன் எடுத்த வீரர்கள்:
வீரர் ரன் பவுலர் ஆண்டு மொத்தம்
விஸ்செர் 6, 6, 6, 1 நோ பால், 6, 0, 1 நோ பால், 1 நோ பால்+6, 6 நிபிகோ 2024 39
யுவராஜ் 6, 6, 6, 6, 6, 6 பிராட் 2007 36
போலார்டு 6, 6, 6, 6, 6, 6 தனஞ்செயா 2021 36
ரோகித்+ரிங்கு சிங் 1 நோ பால்+4, 6, 6, 1+6, 6, 6 கரிம் ஜனத் 2024 36
திபேந்திரா சிங் 6, 6, 6, 6, 6, 6 கம்ரான் கான் 2024 36
பூரன் 6, 1 நோ பால்+4, 5 வைடு, 0, 4 உதிரி, 4, 6, 6 ஓமர்ஜாய் 2024 36
75.86 சதவீதம்
'டி-20' வரலாற்றில் ஒரு அணியின் ஸ்கோரில், அதிக சதவீத ரன் எடுத்த வீரர் ஆனார் சமோவாவின் விஸ்செர். சமோவா எடுத்த ஸ்கோரில் (174 ரன்) 75.86 சதவீத ரன் விஸ்செர் (132) எடுத்தார். முன்னதாக 2018ல் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆஸ்திரேலியா 229/2 ரன் எடுத்தது. இதில் ஆரோன் பின்ச் (172), 75.10 சதவீத ரன் எடுத்ததே அதிகமாக இருந்தது.
சிட்னியில் பயிற்சி
ஆஸ்திரேலியாவின் சிட்னியில், வேகப்பந்து வீச்சாளராக விளையாடியவர் விஸ்செர். காயம் காரணமாக 'லெக் ஸ்பின்', பேட்டராக மாறினார்.