ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால் * வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி
ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால் * வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி
ADDED : ஜூன் 23, 2026 11:46 PM

டப்ளின்: ''இந்திய அணியின் 'ஜெர்சி'யை பெற்ற தருணத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. எனது கனவு நனவாகியுள்ளது,''என வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி. இடது கை துவக்க பேட்டராக ஜொலிக்கிறார். பிரிமியர் 'டி-20' தொடரில் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக 776 ரன் குவித்து, முதலிடம் பெற்றார். சமீபத்தில், இலங்கைக்கு எதிரான முத்தரப்பு பைனலில் (50 ஓவர்) இந்திய 'ஏ'அணிக்காக அசத்தினார். 15 வயதான இவர், தான் சந்தித்த முதல் 11 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சர் விளாசி, லிஸ்ட் 'ஏ' போட்டியில் அதிவேக அரைசதம் (50 ரன்) எட்டி, உலக சாதனை படைத்தார். மொத்தம் 29 பந்தில் 94 ரன் விளாசி, இந்தியா 'ஏ' கோப்பை வெல்ல உதவினார்.
சிறப்பு 'வீடியோ'
அதிரடியாக பேட் செய்யும் வைபவ், அடுத்து நடக்க உள்ள அயர்லாந்து (ஜூன் 26, 28), இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் தங்கியுள்ள ஓட்டல் அறைக்கு இந்திய அணியின் 'ஜெர்சி'யை, 'த்ரோ-டவுண்' பயிற்சி நிபுணர் ரகு எடுத்து வந்தார். அவரிடம் ஆசி பெற்ற வைபவ், இந்திய ஜெர்சியை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டார். இந்த 'வீடியோவை' 'ரசிகர்களே... தேசமே காத்திருந்த தருணம் வந்துவிட்டது' என்ற வாசகத்துடன் பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ளது.
அதில் வைபவ் கூறுகையில்,''இந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் எந்த இலக்குடன் முதன் முதலில் பேட் எடுத்து பயிற்சிக்கு சென்றேனோ, அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்திய அணியின் 'ஜெர்சி'யை பார்த்ததும் எனது புன்னகையை நிறுத்த முடியவில்லை. சில நேரங்களில் நாம் கற்பனையிலும் நினைக்காத விஷயங்கள் நடக்கும். அப்போது நம் உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாது. அந்த நிலையில் தான் நானும் இருக்கிறேன்,''என்றார்.
ராசியான நம்பர்
வைபவிற்கு '03' என்ற எண் பொறிக்கப்பட்ட இந்திய 'ஜெர்சி' வழங்கப்பட்டுள்ளது. இதே 'நம்பரை' தான் முன்பு ஹர்பஜன், ரெய்னா அணிந்து விளையாடினர். அயர்லாந்து தொடரில் வாய்ப்பு கிடைத்தால், இந்திய அணிக்காக அறிமுகமாகும் இளம் வீரராகலாம் (15 வயது). சச்சினின் 37 ஆண்டு கால சாதனையை தகர்க்கலாம். சச்சின், 1989ல் 16 வயது 205 நாளில் (எதிர், பாக்., கராச்சி டெஸ்ட்) அறிமுகமானார். இம்முறை சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் போன்ற துவக்க வீரர்கள் இருப்பதால், வைபவ் சூர்யவன்ஷிக்கு கடும் போட்டி காத்திருக்கிறது.
சூர்யான்ஷ் வாய்ப்பு
அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் இருந்து இந்திய அணி 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் ரெட்டி (இடது தொடையில் தசை பிடிப்பு) விலகினார். இவருக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே, 23, சேர்க்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் சிறந்த மிடில் ஆர்டர் பேட்டர். அவ்வப்போது பவுலிங்கிலும் கைகொடுப்பார்.
