/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆயுஷ் உலக சாதனை * 117 பந்தில் 181 ரன் விளாசினார்
/
ஆயுஷ் உலக சாதனை * 117 பந்தில் 181 ரன் விளாசினார்
ADDED : டிச 31, 2024 10:50 PM

விசாகப்பட்டனம்: 'லிஸ்ட் ஏ' போட்டியில் 150 ரன்னுக்கும் மேல் விளாசிய இளம் வீரர் என உலக சாதனை படைத்தார்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், விஜய் ஹராரே டிராபி ('லிஸ்ட் ஏ') தொடரின் 32வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. மும்பை, நாகலாந்து மோதிய போட்டி ஆமதாபாத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற நாகலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
ஆயுஷ் அபாரம்
முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆயுஷ் மாட்ரே, ரகுவன்ஷி (56) ஜோடி துவக்கம் தந்தது. ஆயுஷ், 117 பந்தில் 181 ரன் விளாசினார். இதையடுத்து 'லிஸ்ட் ஏ' போட்டியில் இளம் வயதில் 150 ரன் எடுத்த வீரர் ஆனார். சித்தேஷ் (39), பிரசாத் பவார் (38) கைகொடுத்தனர். பின் வரிசையில் கேப்டன் ஷர்துல் தாகூர், 28 பந்தில் 73 ரன் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். மும்பை அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 403 ரன் குவித்தது.
ஜெகதீசா ஆறுதல்
கடின இலக்கைத் துரத்திய நாகலாந்து அணி ரூபெரோ (53) அரைசதம் அடித்தார். ஜெகதீசா சுசித் 104 ரன் அடித்தார். லெம்டுர் 27 ரன் எடுத்தார். கேப்டன் ஜோனாதன் உட்பட மற்ற யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. நாகலாந்து அணி 50 ஓவரில் 214/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மும்பை, 189 ரன்னில் வெற்றி பெற்றது.
17 வயது, 168 நாள்
'லிஸ்ட் ஏ' போட்டியில் இளம் வயதில் 150 ரன்னுக்கும் மேல் (181 ரன், 117 பந்து) விளாசிய வீரர் ஆனார் மும்பை அணியின் ஆயுஷ் மாட்ரே (17 வயது, 168 நாள்). முன்னதாக 2019 தொடரில், மும்பை அணிக்காக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 17 வயது, 291 வது நாளில் 150 ரன்னுக்கும் மேல் (203 ரன், 154 பந்து, எதிர்-ஜார்க்கண்ட்) விளாசி இருந்தார்.
தமிழகம் ஏமாற்றம்
விசாகப்பட்டனத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், விதர்பா அணிகள் மோதின. தமிழக அணிக்கு துஷார் ரஹேஜா (75), ஜெகதீசன் (6) ஜோடி துவக்கம் தந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் (28), பாபா இந்திரஜித் (7) ஏமாற்றினார். விஜய் சங்கர் (27), சித்தார்த் (40), முகமது அலி (48) உதவினர். கேப்டன் சாய் கிஷோர் (14), வருண் சக்ரவர்த்தி (3) கைவிட்டனர். தமிழக அணி 48.4 ஓவரில் 256 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விதர்பா வேகப்பந்து வீச்சாளர் தர்ஷன், 6 விக்கெட் சாய்த்தார்.
விதர்பா அணிக்கு கேப்டன் கருண் நாயர் சதம் விளாசி கைகொடுத்தார். 43.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. கருண் நாயர் (111), ஷுபம் துபே (39) அவுட்டாகாமல் இருந்தனர்.