/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலி 16,000 ரன்கள் * சச்சினை முந்தினார்
/
கோலி 16,000 ரன்கள் * சச்சினை முந்தினார்
ADDED : டிச 24, 2025 10:58 PM

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த 'சி' பிரிவு போட்டியில் ஆந்திரா, டில்லி அணிகள் மோதின. ரிக்கி புய் (122) கைகொடுக்க ஆந்திரா அணி 50 ஓவரில் 298/8 ரன் எடுத்தது.
டில்லி அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (78), நிதிஷ் ராணா (77) உதவினர். 15 ஆண்டுக்குப் பின் விஜய் ஹசாரே தொடரில் களமிறங்கிய 37 வயது 'சீனியர்' கோலி, 83 பந்தில் சதம் விளாசினார். இது இவரது 58 வது 'லிஸ்ட் ஏ' சதம் ஆனது. கோலி 101 பந்தில் 131 ரன் எடுத்தார். டில்லி அணி 37.4 ஓவரில் 300/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இதில் 1 ரன் எடுத்த போது, 'லிஸ்ட் ஏ' அரங்கில், சச்சினை முந்தி (391 இன்னிங்ஸ்), அதிவேகமாக 16,000 ரன் எடுத்த வீரர் ஆனார் கோலி. இவர் 330 இன்னிங்சில் 16,130 ரன் எடுத்தார். ஒட்டுமொத்தமாக சச்சின் 538 இன்னிங்சில் 21,999 ரன் எடுத்துள்ளார்.
* தவிர, 10,000 முதல் 16,000 வரை எடுத்த ஒவ்வொரு 1000 ரன்களையும் அதிவேகமாக எட்டிய வீரராக கோலி திகழ்கிறார்.
* பிரிமியர் தொடர் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டி நடத்த மாநில அரசு அனுமதி தரவில்லை. இதனால் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி மைதானத்தில், ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடந்தது. கோலி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது அமைதியான சூழல் நிலவியது.
ரோகித் '155'
ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ('சி') சிக்கிம், மும்பை மோதின. சிக்கிமின் (236/7) இலக்கைத் துரத்திய மும்பை அணி 30.3 ஓவரில் 237/2 ரன் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. மும்பை வீரர் ரோகித் சர்மா, 94 பந்தில் 155 ரன் (9X6, 18X4) குவித்தார். 'லிஸ்ட் ஏ' அரங்கில் இது 37 வது சதம் ஆனது. தவிர, அதிக முறை 150 ரன்னுக்கும் மேல் எடுத்த வீரர்களில் வார்னருடன் (9, ஆஸி.,) இணைந்து முதலிடம் பெற்றார் ரோகித் (9)
* 38 வயதான ரோகித், நேற்று 62 பந்தில் சதம் அடித்தார். 'லிஸ்ட் ஏ' அரங்கில் ரோகித்தின் அதிவேக சதம் இது ஆனது. முன்னதாக 2023 உலக கோப்பை தொடரில் 63 பந்தில் சதம் (எதிர்-ஆப்கன்) அடித்து இருந்தார்.
தமிழகம் வெற்றி
ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் ('ஏ'), கேப்டன் ஜெகதீசன் (67), பிரதோஷ் (73) உதவ, தமிழக அணி (310/7), 101 ரன்னில் புதுச்சேரி அணியை (209/10) வீழ்த்தியது.
* இங்கு நடந்த மற்றொரு போட்டியில் 'ஏ', இஷான் கிஷான் (39 பந்து, 125 ரன்) சதம் கைகொடுக்க ஜார்க்கண்ட் அணி 412/9 ரன் குவித்தது. பின் தேவ்தத் படிக்கல் 147 ரன் (112 பந்து) விளாச, கர்நாடக அணி 413/5 ரன் (47.3 ஓவர்) எடுத்து, 5 விக்கெட்டில் வென்றது.

