கோலி 'புயல்' மீண்டும் வீசுமா: இன்று இந்தியா-வெ.இண்டீஸ் 2வது மோதல்
கோலி 'புயல்' மீண்டும் வீசுமா: இன்று இந்தியா-வெ.இண்டீஸ் 2வது மோதல்
ADDED : செப் 29, 2026 11:31 PM

கவுஹாத்தி: இரண்டாவது ஒருநாள் போட்டியில், கோலி விளாசினால், இந்திய அணி எளிதில் தொடரை கைப்பற்றலாம்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்று இரண்டாவது போட்டி அசாமின் கவுஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
'பேட்டிங்' பலம்
இந்திய அணியின் 'பேட்டிங்' வலுவாக உள்ளது. முதல் போட்டியில் அசத்திய ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் (110 ரன்), விராத் கோலி (139) மீண்டும் விளாசலாம். ஒருநாள் அரங்கில் 15,000 ரன், 55வது சதம் அடித்த 'சேஸ் மாஸ்டர்' கோலிக்கு, பர்சபாரா மைதானம் ராசியானது. இங்கு 2023ல் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது 45வது சதம் அடித்தார். இது, 2023ல் நடந்த உலக கோப்பை தொடருக்கு சிறந்த அடித்தளமாக அமைந்தது. இதே போல இன்றைய போட்டியில் ஜொலித்தால், 2027ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) சாதிக்க உதவும். ருதுராஜ், 'கீப்பர்-பேட்டர்' ராகுல் ரன் குவிக்கலாம்.
சிராஜ் வாய்ப்பு
பந்துவீச்சில் தான் குழப்பம் நிலவுகிறது. கடந்த போட்டியில் சிராஜ் நீக்கப்பட்டு, நிதிஷ் குமார் ரெட்டி இடம் பெற்றார். தனது முதல் ஓவரிலேயே நிதிஷ் 18 ரன் கொடுத்தார். இவருக்கு பதில் அனுபவ சிராஜ் அல்லது காஷ்மீர் 'வேகப்புயல்' அகிப் நபிக்கு வாய்ப்பு அளிக்கலாம். முதல் போட்டியில் 4 விக்கெட் சாய்த்த குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, நமன் திர் 'சுழல்' ஜாலம் நிகழ்த்தலாம்.
கிரிவ்ஸ் நம்பிக்கை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடந்த போட்டியில் ஜஸ்டின் கிரிவ்ஸ் (101), கேம்பல் (62) நல்ல துவக்கம் கொடுத்தனர். 'மிடில் ஆர்டர்' சரிந்ததால், மீள முடியவில்லை. ஜுவல் ஆன்ட்ரூ நீக்கப்பட்டு, ஷெர்பேன் ரூதர்போர்டு இடம் பெறலாம். கேப்டன் ஷாய் ஹோப், கார்டி, அமிர் ஜங்கூ, 'ஆல்-ரவுண்டர்' ராஸ்டன் சேஸ் ரன் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
வேகத்தில்' அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ், 'சுழலில்' குடகேஷ் மிரட்டலாம்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 143 ஒருநாள் போட்டியில் மோதின. இந்தியா 73, வெ.இண்டீஸ் 64ல் வென்றன. 2 போட்டி 'டை' ஆனது. 4 போட்டிக்கு முடிவு இல்லை.
* ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.
* இன்று மழைக்கு வாய்ப்பு உண்டு.
