/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆமதாபாத் டெஸ்டில் அசத்துமா இந்தியா * வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதல்
/
ஆமதாபாத் டெஸ்டில் அசத்துமா இந்தியா * வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதல்
ஆமதாபாத் டெஸ்டில் அசத்துமா இந்தியா * வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதல்
ஆமதாபாத் டெஸ்டில் அசத்துமா இந்தியா * வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதல்
ADDED : அக் 01, 2025 10:06 PM

ஆமதாபாத்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று துவங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு அசத்த காத்திருக்கின்றனர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று துவங்குகிறது.
இந்திய அணி கடைசியாக 2024, நவம்பரில் சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதன் பின் அணியில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டன. ரோகித், கோலி, சுழல் ஜாம்பவான் அஷ்வின் ஓய்வு பெற்று விட்டனர்.
இருப்பினும், புதிய கேப்டன் சுப்மன் கில், தலைமையில் இந்திய அணி, வழக்கம் போல ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் (2-2) செய்து அசத்தியது.
ராகுல் நம்பிக்கைதற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சாதிக்க காத்திருக்கும் இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி துவக்கம் தர உள்ளது. இந்திய ஏ அணிக்காக 176 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்த ராகுல் சிறப்பான 'பார்மில்' உள்ளார். இங்கிலாந்து தொடருக்குப் பின் முழு ஓய்வில் இருந்த ஜெய்ஸ்வால், ரன் மழை பொழியலாம். மூன்றாவது இடத்தில் தமிழகத்தின் சாய் சுதர்சன், கிடைக்கும் வாய்ப்புகளில் சாதிக்க முயற்சிக்க வேண்டும்.இங்கிலாந்து மண்ணில் 754 ரன் குவித்த சுப்மன் கில், சொந்தமண்ணில் முதன் முறையாக கேப்டனாக களமிறங்குகிறார். தவிர விக்கெட் கீப்பராக துருவ் ஜுரல் உள்ளார். கூடுதல் பேட்டர் இடத்தில் தேவ்தத் படிக்கல் அல்லது நிதிஷ் குமார் சேர்க்கப்படலாம்.
பவுலிங் எப்படி
'சீனியர்' பும்ரா, முகமது சிராஜ் ஜோடி வேகப்பந்து வீச்சில் கைகொடுக்க உள்ளது. 'சுழலில்' துணைக் கேப்டன் ஜடேஜா, குல்தீப் இடம் பெறலாம். கூடுதலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேல் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கேற்ப, ஹாம்ப்ஷயர் அணிக்காக கவுன்டி போட்டியில் பங்கேற்ற வாஷிங்டன், இந்திய அணியில் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மீளாத சோகம்
வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்தமண்ணில் நடந்த ஜமைக்கா டெஸ்டில், மிக மோசமாக, 27 ரன்னுக்கு சுருண்ட (எதிர்-ஆஸி.,) சோகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. தவிர உலக டெஸ்ட் சாம்பியன் தொடருக்கான முதல் 3 போட்டியிலும் தோற்ற, புள்ளிக்கணக்கை துவக்காமல் உள்ளது.
பேட்டிங் பலத்தை அதிகரிக்க, பிராத்வைட் நீக்கப்பட்டு, ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாத முன்னாள் வீரர் சந்தர்பால் மகன் டகநரைன், அலிக் அதானஸ் அழைக்கப்பட்டுள்ளனர். கேப்டன் ராஸ்டன் சேஸ், ஷாய் ஹோப் உள்ளனர்.
ஷமர் ஜோசப், அல்சாரி ஜோசப் காயத்தால் விலகியதால், பவுலிங் பலவீனமாக காணப்படுகிறது. இதனால் ஜேடன் சீலஸ், வாரிகனுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. சுழலில் காரி பியர்ரே அறிமுகம் ஆக உள்ளார்.
வெற்றி முக்கியம்
உலக டெஸ்ட் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும். தற்போது ஆஸ்திரேலியா (100.00%), இலங்கை (66.67%) முதல் இரு இடத்தில் உள்ளன. மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய அணி (46.67%), சொந்தமண்ணில், வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றால், பட்டியலில் முன்னேறலாம்.
மாறிய ஆடுகளம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் (2024) இந்திய அணி, சொந்தமண்ணில் வேகத்திற்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடியது. இத்தொடரில் தோற்ற போதும், முதல் டெஸ்ட் நடக்கும் ஆமதாபாத் ஆடுகளம், வேகத்திற்கு கைகொடுக்கும் வகையில், அதிக புற்களுடன் பசுமையாக உள்ளது.
மழை வருமா
ஆமதாபாத்தில் முதல் நாளான இன்று காலை 10:00 மணிக்கு மழை வர 55 சதவீதம் வாய்ப்புள்ளது. அடுத்த இரு நாள் வானம் மேகமூட்டமாக காணப்படும். கடைசி இரு நாளில் இடியுடன் கூடிய மழை வர 54, 62 சதவீதம் வாய்ப்புள்ளது.
யார் ஆதிக்கம்
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 100 டெஸ்டில் மோதின. இந்தியா 23, வெஸ்ட் இண்டீஸ் 30ல் வென்றன. 47 போட்டி 'டிரா' ஆனது.
23 ஆண்டு
டெஸ்டில் இந்திய அணி கடைசியாக 2002, கிங்ஸ்டன் டெஸ்டில், வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது. இதன் பின் நடந்த 25 டெஸ்டில் இந்தியா 15ல் வென்றது. 10 போட்டி 'டிரா' ஆகின.
* சொந்தமண்ணில் 1994ல் நடந்த மொகாலி டெஸ்டில் இந்தியா, வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது. இதன் பின் இந்திய அணி (8 வெற்றி, 2 'டிரா'), தோற்கவில்லை.