முத்திரை பதித்த தேவ், துருவ், சுதார்: டெஸ்ட் அரங்கில் இந்தியா எழுச்சி
முத்திரை பதித்த தேவ், துருவ், சுதார்: டெஸ்ட் அரங்கில் இந்தியா எழுச்சி
ADDED : ஆக 28, 2026 11:23 PM

கொழும்பு: இந்திய டெஸ்ட் அணியின் புதிய நட்சத்திரங்களாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல், மானவ் சுதார் உருவெடுத்துள்ளனர்.
இலங்கை சென்ற இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. காலே டெஸ்டில் இந்தியா வென்றது. கொழும்பு டெஸ்டில் வெற்றி நழுவிய போதும் 'டிரா' செய்தது. தொடரை 1-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது.
நாயகன் படிக்கல்: இந்திய அணி பேட்டர்கள் சமீப காலமாக 'ஸ்பின்னர்'களிடம் திணறினர். இதன் காரணமாக, சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த குறையை இலங்கை தொடரில் தேவ்தத் படிக்கல் நிவர்த்தி செய்தார். மூன்றாவது இடத்தில் களமிறங்கிய இவர், துாணாக நின்று பேட் செய்தார். 2 சதம் உட்பட 328 ரன் (சராசரி 109.33) குவித்து, தொடர் நாயகன் விருது வென்றார். தனது சிறப்பான 'புட்-வொர்க்' மூலம் இலங்கை 'ஸ்பின்னர்'களை பதம் பார்த்தார். சாய் சுதர்சனின் 3வது இடத்துக்கு 'செக்' வைத்துள்ளார்.
தேவ்தத் பயிற்சியாளர் முகமது நசீருதின் கூறுகையில்,''இலங்கை தொடருக்கு முன் நன்கு திட்டமிட்டோம். 'கிரீசில்' நின்று விளையாடினால் 'ஸ்பின்னர்'களை சமாளிப்பது கடினம் என்பதை அறிந்து கொண்டோம். இறங்கி வந்து பந்தை அடிப்பது, 'டிரைவ்' செய்வது என 'புட்-வொர்க்' மூலம் விளாச முடிவு செய்தோம். இதற்கு நல்ல பலன் கிடைத்தது,''என்றார்.
பேட்டிங் வரிசையில் 6வது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார் 'கீப்பர்-பேட்டர்' துருவ் ஜுரல். ஒரு சதம், அரைசதம் சேர்த்து 173 ரன் (சராசரி 86.50) எடுத்தார்.
சுதார் 'மேஜிக்': இலங்கை சூழ்நிலைக்கு ஏற்ப அசத்தினார் 'ஸ்பின்னர்' மானவ் சுதார். மொத்தம் 16 விக்கெட் சாய்த்தார். எதிர்காலத்தில் ரவிந்திர ஜடேஜா இடத்தை பூர்த்தி செய்யக்கூடியவராக உள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இவரது ஆதிக்கம் தொடரலாம்.
கொழும்பில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி, 5 'செஷன்' தாக்குப்பிடித்து, 'டிரா' செய்தது நமக்கு ஏமாற்றம். 'வேகத்தில்' சிராஜ் சோபிக்கவில்லை. அறிமுக 'ஸ்பின்னர்' சரண்ஷ் ஜெயின் சரியான அளவில் பந்துவீச தவறினார். இவருக்கு பதில் அனுபவ குல்தீப் யாதவை தக்க வைத்திருக்கலாம். சில தடுமாற்றம் இருந்த போதும், தொடரை வென்று, இந்திய அணி சாதித்தது.
கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்,''பேட்டிங்கில் தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல் பலம் சேர்த்தனர். இதே போல தேவ் (தேவ்தத்) தொடர்ந்து பேட் செய்தால், அவருக்கே 3வது இடத்தை நிச்சயமாக கொடுத்துவிடுவோம்,''என்றார்.
அஷ்வின் ஆவேசம்
இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய 'கீப்பர்-பேட்டர்' ரிஷாப் பன்ட், 168 ரன் எடுத்தார்.
இது பற்றி இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' அஷ்வின் கூறுகையில்,''எனது எதிர்பார்ப்பை ரிஷாப் பூர்த்தி செய்யவில்லை. டெஸ்டில் போதிய அனுபவம் இருந்தும், தவறான 'ஷாட்' அடித்து விக்கெட்டை வீணாக இழக்கிறார். அதிரடி ஆட்டத்தை மாற்ற வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும்,''என்றார்.
காம்பிர் பாராட்டு
இந்திய பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,''டெஸ்ட் போட்டிக்கு பொறுமை, மனவலிமை அவசியம். இவற்றை சிறப்பாக வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு பாராட்டு. இலங்கை சார்பில் சோனுல் தினுஷா அசத்தினார்,''என்றார்.
தினுஷா வந்த கதை
இலங்கை வீரர் சோனல் தினுஷா, 420 ரன் (சராசரி 140.00) குவித்தார். இதில் 173 ரன்னை 'ஸ்வீப் ஷாட்' மூலம் எடுத்தார். கொழும்பு டெஸ்டில் தனிநபராக போராடி, சதம் அடித்து, 'டிரா' செய்ய உதவினார்.
தினுஷா பயிற்சியாளர் ஆஷன் பிரியன்ஜன் கூறுகையில்,''முதலில் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். பின் கிரிக்கெட்டுக்கு மாறினார். இவரது சகோதரி தான் சிலரிடம் கடன் பெற்று, முதல் கிரிக்கெட் பேட் வாங்கிக் கொடுத்தார். 'ஸ்பின்னர்'களை சமாளிக்க 'ஸ்வீப் ஷாட்' கைகொடுக்கும் என ஆலோசனை கூறினேன். இந்த ஒரே 'ஷாட்'டை, வலை பயிற்சியில் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்தார் தினுஷா. டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய 'ஸ்பின்னர்'களை சமாளிக்க சிறப்பான முறையில் தயாராகி இருந்தார். ரன் மழை பொழிந்து திறமை நிரூபித்தார்,''என்றார்.
