/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திண்டுக்கல் அணி 'திரில்' வெற்றி: சேப்பாக்கம் அணி ஏமாற்றம்
/
திண்டுக்கல் அணி 'திரில்' வெற்றி: சேப்பாக்கம் அணி ஏமாற்றம்
திண்டுக்கல் அணி 'திரில்' வெற்றி: சேப்பாக்கம் அணி ஏமாற்றம்
திண்டுக்கல் அணி 'திரில்' வெற்றி: சேப்பாக்கம் அணி ஏமாற்றம்
ADDED : ஜூலை 31, 2024 11:15 PM

நத்தம்: கேப்டன் அஷ்வின், ஷிவம் சிங் அரைசதம் விளாச, 'எலிமினேட்டர்' போட்டியில் திண்டுக்கல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக்கம் அணி ஏமாற்றம் அடைந்தது.
தமிழகத்தில் டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் சேப்பாக்கம், திண்டுக்கல் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
சேப்பாக்கம் அணிக்கு நாராயண் ஜெகதீசன் (25), பிரதோஷ் ரஞ்சன் பால் (19) ஆறுதல் தந்தனர். தனிநபராக அசத்திய கேப்டன் பாபா அபராஜித், 54 பந்தில், 72 ரன் எடுத்தார். சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தது. அபிஷேக் (22) அவுட்டாகாமல் இருந்தார். திண்டுக்கல் சார்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு ஷிவம் சிங், கேப்டன் அஷ்வின் அரைசதம் விளாசினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்த போது அஷ்வின் (57 ரன், 4 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டானார். ஷிவம் சிங், 49 பந்தில் 64 ரன் விளாசினார். ராஹில் ஷா வீசிய கடைசி ஓவரின் 5வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தினேஷ் ராஜ் வெற்றியை உறுதி செய்தார். திண்டுக்கல் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுபோத் (14), தினேஷ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
நாளை சென்னையில் நடக்கவுள்ள தகுதிச் சுற்று-2ல் திண்டுக்கல் அணி, தகுதிச் சுற்று-1ல் தோல்வியடைந்த திருப்பூர் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, ஆக. 4ல் சென்னையில் நடக்கும் பைனல் கோவை அணியுடன் விளையாடும்.