/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணி அபாரம்: போப் சதம் விளாசல்
/
இங்கிலாந்து அணி அபாரம்: போப் சதம் விளாசல்
UPDATED : ஜூலை 18, 2024 11:08 PM
ADDED : ஜூலை 18, 2024 10:58 PM

நாட்டிங்காம்: இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தின் போப் சதம் விளாசினார்.
இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. நாட்டிங்காமில் இரண்டாவது டெஸ்ட் துவங்கியது. ஆண்டர்சன் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து 'லெவன்' அணியில் மார்க் உட் இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் 'லெவன்' அணியில் குடகேஷ் மோதிக்கு பதிலாக கெவின் சின்க்ளேர் தேர்வானார். 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வைட் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே (0) ஏமாற்றினார். பின் இணைந்த பென் டக்கெட், போப் ஜோடி நம்பிக்கை தந்தது. ஜேசன் ஹோல்டர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டக்கெட், 32 பந்தில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்த போது ஷாமர் ஜோசப் பந்தில் டக்கெட் (71) அவுட்டானார்.
ஜோ ரூட் (14) நிலைக்கவில்லை. ஹாரி புரூக் (36) ஓரளவு கைகொடுத்தார். அல்சாரி ஜோசப் வீசிய 33வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய போப் (121), ஜெய்டன் சீல்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் கடந்தார். கேப்டன் ஸ்டோக்ஸ் (69) அரைசதம் விளாசினார். ஜேமி ஸ்மித் (36) ஆறுதல் தந்தார். அட்கின்சன் (2) ஏமாற்றினார். வோக்ஸ் (37) கைகொடுத்தார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மார்க் உட் (13) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மூன்றாவது இடம்
டெஸ்ட் அரங்கில் அதிவேக அரைசதம் விளாசிய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 3வது இடத்தை (தலா 32 பந்து) இயான் போத்தமுடன் (எதிர்: நியூசி., 1986, ஓவல்) பகிர்ந்து கொண்டார் டக்கெட். முதலிரண்டு இடங்களில் இயான் போத்தம் (28 பந்து, எதிர்: இந்தியா, 1981, டில்லி), ஜானி பேர்ஸ்டோவ் (30 பந்து, எதிர்: நியூசி., 2022, லீட்ஸ்) உள்ளனர்.