/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாதிக்குமா இந்திய அணி * இன்று இரண்டாவது டெஸ்ட் துவக்கம்
/
சாதிக்குமா இந்திய அணி * இன்று இரண்டாவது டெஸ்ட் துவக்கம்
சாதிக்குமா இந்திய அணி * இன்று இரண்டாவது டெஸ்ட் துவக்கம்
சாதிக்குமா இந்திய அணி * இன்று இரண்டாவது டெஸ்ட் துவக்கம்
ADDED : பிப் 01, 2024 10:53 PM

விசாகப்பட்டனம்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று விசாகப்பட்டனத்தில் துவங்குகிறது. கோலி, ராகுல், ஜடேஜா என முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்தியா களமிறங்குகிறது. இங்கிலாந்து அணியில் அனுபவ 'வேகப்புயல்' ஆண்டர்சன் மிரட்ட வருகிறார். இதை கண்டு கலங்காமல், கேப்டன் ரோகித் சர்மா வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 190 ரன் முன்னிலை பெற்றது. இருப்பினும் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில், உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள், அஷ்வின், ஜடேஜாவை எளிதாக சமாளித்த இங்கிலாந்து அணி, 3 டெஸ்டில் மட்டும் விளையாடிய சுழல் பவுலர்களை கொண்டு, 28 ரன்னில் இந்தியாவை வீழ்த்தியது.
மூன்று ஆண்டுக்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் தோற்று, தொடரை துவக்கியது இந்தியா. பின் மீண்டு வந்து கோப்பை கைப்பற்றியது. இம்முறையும் இதுபோல இந்திய அணி எழுச்சி பெற வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.
கோலி, ராகுல், ஜடேஜா என முன்னணி வீரர்கள் இந்த டெஸ்டில் இல்லை. இருப்பினும், 2019ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விசாகப்பட்டனம் டெஸ்டின் இரு இன்னிங்சில் 176, 127 ரன் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா, மீண்டும் அசத்த முயற்சிக்கலாம். ஜெய்ஸ்வால் நம்பிக்கை தந்தாலும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் உள்ளிட்டோர் சொந்தமண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக திணறுவது பலவீனமாக உள்ளது. விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் வெற்றிக்கு உதவினால் நல்லது.
இந்நிலையில் ரஜத் படிதர் இன்று அறிமுகமாக உள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்மழை பொழியும் சர்பராஸ் கானும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் பேட்டிங்கில் கைகொடுக்கலாம்.
குல்தீப் வருகை
பந்துவீச்சில் 'சீனியர்' அஷ்வின், அக்சர் படேலுடன், இன்று குல்தீப் யாதவ் களமிறங்க உள்ளார். இங்கிலாந்து வீரர்களின் 'ஸ்வீப் ஷாட்', 'ரிவர்ஸ் ஷாட்' திட்டத்தை தகர்த்து இந்திய விக்கெட் வேட்டைக்கு உதவ வேண்டும். 'வேகத்தில்' பும்ரா மட்டும் சேர்க்கப்படலாம். சிராஜ் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்படலாம்.
பேட்டிங் பலம்
முதல் டெஸ்டில் வென்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்திய பவுலர்களை சமாளிப்பது, தனது பவுலர்களை சிறப்பாக பயன்படுத்துவது என கேப்டன் ஸ்டோக்ஸ் தந்திரமாக செயல்படுகிறார். பேட்டிங்கில் மிரட்டிய போப்புடன், டக்கெட், கிராலே, ஜோ ரூட், பேர்ஸ்டோவ் மீண்டு வர காத்திருக்கின்றனர். முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் இல்லாத போதும், அறிமுக போட்டியில் 9 விக்கெட் சாய்த்த ஹார்ட்லே, ரேஹன் அகமது, சோயப் பஷிர் கைகொடுக்கலாம். முதல் டெஸ்டில் 48 ஓவர்கள் பந்து வீசிய ஜோ ரூட் அசத்துவது கூடுதல் பலம். வேகத்தில் மார்க் உட் நீக்கப்பட்டு அனுபவ ஆண்டர்சன் இடம் பெற்றுள்ளார்.
மழை வருமா
விசாகப்பட்டனத்தில் வானம் தெளிவாக காணப்படும். அடுத்த ஐந்து நாளுக்கு மழை வர வாய்ப்பில்லை.போட்டி முழுமையாக நடக்கும்.
31
இந்தியா, இங்கிலாந்து அணிகள் 132 டெஸ்டில் மோதின. இந்தியா 31, இங்கிலாந்து 51ல் வென்றன. 50 போட்டி 'டிரா' ஆகின.
* விசாகப்பட்டனத்தில் இங்கிலாந்துக்கு எதிராக மோதிய டெஸ்டில் (2016) இந்தியா, 246 ரன்னில் வெற்றி பெற்றது.
500
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இதுவரை 96 டெஸ்டில் 496 விக்கெட் சாய்த்துள்ளார். கூடுதலாக 4 விக்கெட் கைப்பற்றினால், 500 என்ற மைல்கல்லை எட்டலாம். கும்ளேவுக்குப் (619) பின் இந்த இலக்கை எட்டிய இரண்டாவது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆகலாம்.
* தவிர அஷ்வின் (94) இன்னும் ஒரு விக்கெட் சாய்த்தால் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் வரிசையில் சந்திரசேகரை (95) சமன் செய்யலாம்.
700
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் (183ல் 690 விக்.,) 10 விக்கெட் சாய்த்தால், டெஸ்டில் 700 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய 3வது பவுலர் ஆகலாம். முதல் இரு இடத்தில் முரளிதரன் (800, இலங்கை), வார்ன் (708, ஆஸி.,) உள்ளனர்.
ஆடுகளம் எப்படி
விசாகப்பட்டன ஆடுகளம் முதல் இன்னிங்சில் பேட்டர்களுக்கு கைகொடுக்கும். இம்முறை களிமண் கலந்து 'பிரவுன்' நிறத்தில் காணப்படுகிறது. முதல் நாளில் இருந்தே பந்தில் திருப்பம் ஏற்படும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.