/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலி முன்னே...ரோகித் பின்னே: அஜய் ஜடேஜா ஆலோசனை
/
கோலி முன்னே...ரோகித் பின்னே: அஜய் ஜடேஜா ஆலோசனை
ADDED : மே 03, 2024 11:53 PM

புதுடில்லி: ''உலக கோப்பை தொடரில் 'ஓபனிங்' பேட்டராக கோலி களமிறங்க வேண்டும். மூன்றாவது வீரராக ரோகித் சர்மா வரலாம்,'' என அஜய் ஜடேஜா தெரிவித்தார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் (ஜூன் 2-29) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா, துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக 500 ரன் குவித்துள்ள 'சீனியர்' கோலியும் இடம் பெற்றுள்ளார்.
இந்திய அணியில் துவக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவது வழக்கம். மூன்றாவது இடத்தில் கோலி வருவார். இதில் மாற்றம் செய்ய வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' அஜய் ஜடேஜா வலியுறுத்தினார்.
இவர் கூறுகையில்,''கோலி நல்ல 'பார்மில்' உள்ளார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். இவரை துவக்க வீரராக களமிறக்க வேண்டும். 'டாப்-ஆர்டரில்' அசத்தும் இவர், 'பவர் பிளே' ஓவரில் சுலபமாக ரன் குவிப்பார். கேப்டனாக பல்வேறு விஷயங்களை ரோகித் சர்மா சிந்திக்க வேண்டியிருக்கும். போட்டியின் போக்கை புரிந்து கொள்ள இவர், மூன்றாவது வீரராக வரலாம்.
ஹர்திக் பாண்ட்யா 'ஸ்பெஷல்' வீரர். வேகப்பந்துவீச்சு, பேட்டிங்கில் கைகொடுக்க கூடிய இவரை போன்ற வீரரை இந்தியாவில் காண்பது கடினம். 'பார்ம்' அடிப்படையில் அணி தேர்வு செய்யப்படவில்லை. அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் ஏற்கனவே திறமை நிரூபித்தவர்கள். இவர்கள் எடுத்துள்ள ரன், வீழ்த்திய விக்கெட்டுகளே சாட்சி. ஒவ்வொரு வீரரும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். இதற்கான வியூகத்தை ரோகித் அமைக்க வேண்டும்,''என்றார்.
ஸ்ரீநாத் வாய்ப்பு
'டி-20' உலக கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. 28 நாளில், 9 இடங்களில் 55 போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான 'மேட்ச் ரெப்ரியாக' இந்தியாவை சேர்ந்த ஜவகல் ஸ்ரீநாத், அம்பயர்களாக நிதின் மேனன், ஜெயராமன் மதனகோபால் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மசனோ, ரிச்சர்ட் இலிங்வொர்த் சேர்த்து மொத்தம் 20 அம்பயர்கள், டேவிட் பூன், ஜெப் குரோவ் உள்ளிட்ட 6 மேட்ச் ரெப்ரிகள் என 26 பேரின் பட்டியலை நேற்று ஐ.சி.சி., வெளியிட்டது.