ADDED : ஆக 19, 2026 10:49 PM

லீட்ஸ்: இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 171 ரன் எடுத்தது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணிக்கு ஒல்லி ராபின்சன் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' அஸான் அவாய்ஸ் (0), ஷான் மசோத் (5) வெளியேறினர். பாகிஸ்தான் அணி 23/2 ரன் எடுத்திருந்த போது, மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
பின் இணைந்த இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபிக் ஜோடி நம்பிக்கை தந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது, ஜோஷ் டங் பந்தில் இமாம் (42) அவுட்டானார். ராபின்சன் பந்தில் ஷகீல் (5) அவுட்டானார். நிதானமாக ஆடிய ஷபிக் (61) அரைசதம் கடந்தார். ஜோஷ் டங் 'வேகத்தில்' கேப்டன் சல்மான் ஆகா (21), முகமது ரிஸ்வான் (12), அலி உஸ்மான் (0), முகமது அபாஸ் (2) வெளியேறினர்.
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 171 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து சார்பில் ராபின்சன், ஜோஷ் டங் தலா 5 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் (15) ஏமாற்றினார். இங்கிலாந்து அணி 9.2 ஓவரில் 40/1 ரன் எடுத்திருந்தது.
