ADDED : செப் 09, 2026 10:21 PM

புதுடில்லி: இந்தியா 'ஏ' அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலியா 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற 2 டெஸ்ட் (செப். 22-25, செப். 29-அக். 2), 3 ஒருநாள் போட்டிகள் (அக். 6, 9, 11) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் புதுச்சேரியில் நடக்கவுள்ளன. இத்தொடர்களுக்கான இந்தியா 'ஏ' அணி அறிவிக்கப்பட்டது.
ஒருநாள் போட்டி அணிக்கு சீனியர் 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா 32, தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, பி.சி.சி.ஐ., உயர்திறன் மையத்தில், காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்ட்யா (இடது தொடை தசை பிடிப்பு), உடற்தகுதியை பொறுத்து விளையாடும் 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யப்படுவார்.
ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், துணை கேப்டனாக தேவ்தத் படிக்கல் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தேவ்தத் படிக்கல் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக, காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட தமிழகத்தின் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவிர இவர், ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
