/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஹாரி புரூக் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
ஹாரி புரூக் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஹாரி புரூக் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஹாரி புரூக் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : டிச 11, 2024 10:12 PM

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக், 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக், 898 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து முதன்முறையாக முதலிடத்துக்கு முன்னேறினார். வெலிங்டன் டெஸ்டில் சதம் விளாசிய புரூக், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் அதிக ரேட்டிங் புள்ளி பெற்ற வீரர்கள் வரிசையில் 34வது இடத்தை இந்திய ஜாம்பவான் சச்சினுடன் (898 புள்ளி, 2002) பகிர்ந்து கொண்டார் புரூக்.வெலிங்டன் டெஸ்டில் சதம் விளாசிய மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (897 புள்ளி) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்த இரு இடங்களில் நியூசிலாந்தின் வில்லியம்சன் (812), இந்தியாவின் ஜெய்ஸ்வால் (811) நீடிக்கின்றனர்.
அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (781 புள்ளி) 11வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். இப்போட்டியில் ஏமாற்றிய இந்தியாவின் ரிஷாப் பன்ட் (9வது இடம், 724 புள்ளி), விராத் கோலி (20வது இடம், 661 புள்ளி), கேப்டன் ரோகித் சர்மா (31வது இடம், 595 புள்ளி) பின்னடைவை சந்தித்தனர். மற்றொரு இந்திய வீரர் சுப்மன் கில் (672) 17வது இடத்துக்கு முன்னேறினார்.
பவுலர் தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (890 புள்ளி) 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்திய 'சுழல்' வீரர் அஷ்வின் (797) 4வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (415) முதலிடத்தில் தொடர்கிறார். மற்றொரு இந்திய வீரர் அஷ்வின் (283) 3வது இடத்தில் உள்ளார். வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் (284) 2வது இடத்துக்கு முன்னேறினார்.