/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஐ.சி.சி., விருது: பும்ரா பரிந்துரை
/
ஐ.சி.சி., விருது: பும்ரா பரிந்துரை
UPDATED : டிச 30, 2024 11:04 PM
ADDED : டிச 30, 2024 10:31 PM

துபாய்: சிறந்த டெஸ்ட், கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி., விருதுகளுக்கு இந்தியாவின் பும்ரா பரிந்துரைக்கப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும். நடப்பு ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது.
சிறந்த கிரிக்கெட் வீரருக்கான 'சர் கேரி சோபர்ஸ் டிராபி' விருதுக்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு பும்ரா, ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோருடன் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
2023ல் ஏற்பட்ட முதுகுப்பகுதி காயத்தில் இருந்து மீண்ட பும்ரா, நடப்பு ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 13 டெஸ்டில், 71 விக்கெட் சாய்த்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'பார்டர்-கவாஸ்கர் டிராபி'யில் மட்டும் 4 டெஸ்டில், 30 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
இங்கிலாந்தின் ஜோ ரூட், நடப்பு ஆண்டில் டெஸ்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர், 17 டெஸ்டில், 6 சதம் உட்பட 1556 ரன் எடுத்துள்ளார். தவிர இவர், 5வது முறையாக டெஸ்டில் ஒரு ஆண்டில் 1000 அல்லது அதற்கு மேல் ரன் குவித்துள்ளார்.
இம்முறை ஐ.சி.சி., விருதுக்கு இந்தியா சார்பில் பும்ரா (டெஸ்ட், கிரிக்கெட் வீரர்), அர்ஷ்தீப் சிங் ('டி-20' வீரர்), ஸ்மிருதி மந்தனா (ஒருநாள் போட்டி வீராங்கனை), ஸ்ரேயங்கா பாட்டீல் (வளர்ந்து வரும் வீராங்கனை) என 4 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்னர்.