/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இம்ரான் தாஹிர் புதிய சாதனை: 5 விக்கெட் சாய்த்தார்
/
இம்ரான் தாஹிர் புதிய சாதனை: 5 விக்கெட் சாய்த்தார்
ADDED : ஆக 23, 2025 09:58 PM

ஆன்டிகுவா: கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் 5 விக்கெட் சாய்த்த இம்ரான் தாஹிர் சாதனை படைத்தார்.
வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) 13வது சீசன் நடக்கிறது. ஆன்டிகுவாவில் நடந்த லீக் போட்டியில் கயானா அணி (211/3) 83 ரன் வித்தியாசத்தில் ஆன்டிகுவா அண்ட் பார்புடா அணியை (128/10) வீழ்த்தியது. 'சுழலில்' அசத்திய கயானா அணி கேப்டன் இம்ரான் தாஹிர், 4 ஓவரில், 21 ரன் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட் சாய்த்தார். இதில் ஒரு 'மெய்டன் ஓவர்' அடங்கும். ஆட்ட நாயகன் விருதை தாஹிர் வென்றார்.
'டி-20' அரங்கில், ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய மூத்த கேப்டன் என சாதனை படைத்தார் இம்ரான் தாஹிர் (46 வயது). இதற்கு முன், 2004ல் மலாவி அணி கேப்டன் மோசாம் அலி பெய்க், 5 விக்கெட் (எதிர்: கேமரூன், 40 வயது) சாய்த்திருந்தார்.
'டி-20' அரங்கில் அதிக முறை (தலா 5) ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் 2வது இடத்தை மலிங்கா (இலங்கை), புவனேஷ்வர் குமார் (இந்தியா), சாகிப் அல் ஹசனுடன் (வங்கம்) பகிர்ந்து கொண்டார் தாஹிர். முதலிடத்தில் நமீபியாவின் டேவிஸ் வைஸ் (7 முறை) உள்ளார்.
தவிர இது, 'டி-20' அரங்கில் இம்ரான் தாஹிரின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன், 2018ல் கிழக்கு லண்டனில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், 4 ஓவரில், 23 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்திருந்தார்.