/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'ஓபனிங்' வீரராக 'கிங்' கோலி * கங்குலி விருப்பம்
/
'ஓபனிங்' வீரராக 'கிங்' கோலி * கங்குலி விருப்பம்
ADDED : மே 10, 2024 11:00 PM

பெங்களூரு: ''டி-20 உலக கோப்பை தொடரில் துவக்க வீரராக கோலி களமிறங்க வேண்டும்,'' என கங்குலி தெரிவித்தார்.
ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக அசத்துகிறார் கோலி. துவக்க பேட்டராக வரும் இவர், 12 போட்டியில் 634 ரன் (சராசரி 70.44, 'ஸ்டிரைக் ரேட்' 153.51) குவித்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் 47 பந்தில் 92 ரன் விளாசினார்.
அடுத்து, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை தொடரிலும் (ஜூன் 2-29) துவக்க வீரராக கோலி வரலாம். இந்திய அணிக்காக இவர், மூன்றாவது இடத்தில் களமிறங்குவது வழக்கம். இதை மாற்றி, துவக்கத்தில் கேப்டன் ரோகித்-கோலி, மூன்றாவது இடத்தில் சூர்யகுமார், அதை தொடர்ந்து ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திரா ஜடேஜா வந்தால் சிறப்பாக இருக்கும்.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது:
'டி-20' உலக கோப்பை தொடருக்கு தரமான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான பும்ரா உள்ளார். சிராஜ், அக்சர் படேல், குல்தீப் என அனுபவ பவுலர்கள் இடம் பெற்றுள்ளனர். 'நவீன 'டி-20' போட்டியில் பேட்டர் 'செட்டில்' ஆவதற்கு எல்லாம் நேரம் இல்லை. பந்துகளை விளாசிக் கொண்டே இருக்க வேண்டும்' என சமீபத்தில் சஞ்சு சாம்சன் கூறினார். இது முற்றிலும் உண்மை தான்.
சிறிய மைதானம்
அடித்து விளையாடும் மனநிலையில் பேட்டர்கள் உள்ளனர். ஐ.பி.எல்., தொடரில் 'இம்பேக்ட்' வீரர் விதிமுறை காரணமாக கூடுதலாக ஒரு பேட்டரை சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் 250 ரன்களை சாதாரணமாக எட்டுகின்றனர். டில்லி, ராஜஸ்தான் மோதிய போட்டியில் 26 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இதற்கு பெரும்பாலான இந்திய மைதானங்கள் சிறியதாக இருப்பது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்படுவது முக்கிய காரணம்.
பேட்டர்களை கட்டுப்படுத்த பவுலர்கள் புதிய யுக்திகளை கையாள வேண்டும். உதாரணமாக ஐ.பி.எல்., தொடரில் பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசுகிறார். 12 போட்டியில் 18 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இவரது 'எகானமி ரேட்' 6.20 என்பது சிறப்பு.
துவக்கம் முக்கியம்
ஐ.பி.எல்., தொடரில் ஓபனிங் பேட்டராக மிரட்டுகிறார் கோலி. ஐதராபாத்திற்கு எதிராக மின்னல் வேகத்தில் 92 ரன் எட்டினார். வரும் 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக 'ஓபனிங்' வீரராக கோலி களமிறங்க வேண்டும். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடுகிறார். இவரைவிட சஞ்சு சாம்சன், ரிஷாப் சிறப்பாக 'பேட்' செய்கின்றனர். இவர்களை உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்தது சரியான முடிவு.
இவ்வாறு கங்குலி கூறினார்.