'ஹாட்ரிக்' வெற்றி நோக்கி இந்தியா: வெஸ்ட் இண்டீசுடன் கடைசி மோதல்
'ஹாட்ரிக்' வெற்றி நோக்கி இந்தியா: வெஸ்ட் இண்டீசுடன் கடைசி மோதல்
ADDED : அக் 02, 2026 10:43 PM

புதிய சண்டிகர்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசத்தினால், 'ஹாட்ரிக்' வெற்றி பெறலாம்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என்ற முன்னிலையில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலம் புதிய சண்டிகரில் உள்ள மஹாராஜா யாதவிந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 3வது, கடைசி போட்டி (அக். 3) நடக்கிறது.
'டாப்-ஆர்டர்' பலம்: இந்திய அணியின் 'டாப்-ஆர்டர்' பலமாக உள்ளது. முதலிரண்டு போட்டியில் அசத்திய ரோகித் சர்மா (32, 101 ரன்), கேப்டன் சுப்மன் கில் (110, 223*), விராத் கோலி (139, 29) மீண்டும் ரன் மழை பொழியலாம். இரண்டாவது போட்டியில் 'சூறாவளி' ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், இன்றும் ஜொலித்தால் 'ஹாட்ரிக்' சதம் பதிவு செய்யலாம். 'மிடில்-ஆர்டரில்' ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல், நமன் திர், 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா கைகொடுக்கலாம்.
சிராஜ் வாய்ப்பு: பிரசித் கிருஷ்ணா காயத்தால் விலகிய நிலையில், அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 'லெவன்' அணிக்கு திரும்பலாம். கடந்த இரு போட்டியில் 'வேகத்தில்' ஏமாற்றிய நிதிஷ் குமார் ரெட்டி, அகிப் நபி, குர்னுார் பிரார், அதிக ரன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். 'சுழலில்' குல்தீப் யாதவ் (6 விக்கெட்), ஜடேஜா (2) நம்பிக்கை தருகின்றனர்.
ஆறுதல் வெற்றி: ஏற்கனவே தொடரை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கலாம். பேட்டிங்கில் அமிர் ஜங்கூ (172 ரன்), கேம்பல் (163), கேப்டன் ஷாய் ஹோப் (116) நம்பிக்கை தருகின்றனர். 'வேகத்தில்' அல்ஜாரி ஜோசப் (1 விக்.,), ஜேடன் சீல்ஸ் (1), ஷமர் ஜோசப் (1), 'சுழலில்' ராஸ்டன் சேஸ் (1) எழுச்சி காண வேண்டும்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 144 ஒருநாள் போட்டியில் மோதின. இந்தியா 74, வெ.இண்டீஸ் 64ல் வென்றன. இரண்டு போட்டி 'டை' ஆனது. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
* ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.
* மழைக்கு வாய்ப்பு இல்லை.
