தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியா அலட்சியம்...மாற்றம் நிச்சயம்: கவாஸ்கர் காட்டம்

இந்தியா அலட்சியம்...மாற்றம் நிச்சயம்: கவாஸ்கர் காட்டம்

இந்தியா அலட்சியம்...மாற்றம் நிச்சயம்: கவாஸ்கர் காட்டம்


UPDATED : பிப் 23, 2026 11:30 PM

ADDED : பிப் 23, 2026 11:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2026 11:30 PM ADDED : பிப் 23, 2026 11:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆமதாபாத்: ''தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர்கள் அதீத நம்பிக்கையுடன் விளையாடினர். பொறுப்பற்ற அணுகுமுறை வீழ்ச்சிக்கு வித்திட்டது,'' என கவாஸ்கர் தெரிவித்தார்.

ஆமதாபாத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் (20 ஓவர், 187/7), இந்திய அணி (18.5 ஓவர், 111) 76 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாம்சன் வாய்ப்பு: இதையடுத்து இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம். 'பார்ம்' இல்லாமல் தவிக்கும் அபிஷேக் சர்மா (4 போட்டி 15 ரன்), திலக் வர்மா (5 போட்டி, 107 ரன், ஸ்டிரைக் ரேட் 118), ரிங்கு சிங் (5 போட்டி, 29 பந்தில் 24 ரன், ஸ்டிரைக் ரேட் 82.75) நீக்கப்படலாம். அணியில் இடது கை பேட்டர்கள் அதிகம் இருப்பதால், வலது கை பேட்டரான சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெறலாம். அக்சர் படேல் மீண்டும் சேர்க்கப்படலாம்.

இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: தென் ஆப்ரிக்க அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், மில்லர்-பிரவிஸ் 'பார்ட்னர்ஷிப்' அமைத்து 97 ரன் சேர்த்தனர். இது போன்றதொரு அணுகுமுறையை இந்திய வீரர்கள் பின்பற்றவில்லை. ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அடிக்க முயற்சித்தனர். கடினமான ஆடுகளத்தில், 'ஈகோ' பார்க்காமல் எதிரணியினரிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும். அவர்கள் எப்படி ரன் சேர்த்தனர் என்பதை கவனித்து, அதற்கு ஏற்றவாறு நீங்களும் 'அட்ஜெஸ்ட்' செய்து விளையாட வேண்டும்.

முதல் ஓவரிலேயே இஷான் கிஷான் அவுட்டானார். அப்போது ஓவருக்கு 9.5 ரன் தான் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் திலக் வர்மா தாக்குப்பிடித்திருக்க வேண்டும். மறுமுனையில் 'பார்ம்' இல்லாத அபிஷேக் சர்மா இருந்ததால், கூடுதல் பொறுப்பு எடுத்திருக்க வேண்டும். நல்ல 'பார்ட்னர்ஷிப்' அமைத்து முதல் 6 ஓவரை கடந்திருக்க வேண்டும். இதை செய்ய திலக் தவறினார். 'பவர் பிளே'யில் அனைத்து போட்டிகளிலும் 70 ரன் எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சூழ்நிலையை பொறுத்து 55-60 ரன் எடுத்தால் போதுமானது. ஆனால் இந்திய பேட்டர்களின் பொறுப்பற்ற அணுகுமுறை வீழ்ச்சிக்கு வித்திட்டது.

ஜிம்பாப்வே அணியில் நிறைய இடது கை பேட்டர்கள் உள்ளனர். இதனை உணர்ந்து, அடுத்த போட்டியில் அக்சர் படேலை சேர்க்கலாம். சிறப்பாக பந்துவீசும் அர்ஷ்தீப் சிங்கை நீக்க முடியாது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் 2 ஓவர் தான் வீசினார். நெதர்லாந்துக்கு எதிராக 4 ஓவர் வீசிய போதும், விக்கெட் வீழ்த்தவில்லை. இதனால், வாஷிங்டனுக்கு பதில் அக்சர் படேலை சேர்க்கலாம்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

துணை கேப்டன் சோகம்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய துணை கேப்டன் அக்சர் படேலை சேர்க்காதது சர்ச்சையை கிளப்பியது. ஏற்கனவே 'டி-20' துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் நீக்கப்பட்டார். துணை கேப்டன்கள் எந்த சமயத்திலும் நீக்கப்படலாம் என்ற அச்சம் இந்திய அணியில் காணப்படுகிறது. இது பற்றி இந்திய துணை பயிற்சியாளர் டென் டஸ்காட்டே கூறுகையில்,''துணை கேப்டன் இடத்திற்கு உத்தரவாதம் இல்லை என கருதக்கூடாது. தென் ஆப்ரிக்க அணியில் குயின்டன், ரிக்கிள்டன், மில்லர் என 3 இடது கை பேட்டர்கள் இருந்தனர். இதனால் அக்சர் படேலைவிட 'பவர் பிளே'யில் சிறப்பாக பந்துவீசும் வாஷிங்டன் சுந்தரை சேர்ப்பது என முடிவு செய்தோம். ஆனால், பும்ரா 'வேகத்தில்' குயின்டன், ரிக்கிள்டன் அவுட்டாக, வாஷிங்டன் 2 ஓவருக்கு மேல் பந்துவீச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை,''என்றார்

பிராவோ பாடம்

இந்திய பேட்டர்களை தென் ஆப்ரிக்க 'வேகப்புயல்' நிகிடி திணறடித்தார். 4 ஓவரில் 11 'டாட் பால்' வீசிய இவர், 15 ரன் மட்டுமே கொடுத்தார். நிகிடி கூறுகையில்,''2018ல் சென்னை அணிக்காக விளையாடிய போது சக வீரர் டுவைன் பிராவோவிடம் இருந்து 'ஸ்லோ பால்' வீசும் யுக்தியை கற்றுக் கொண்டேன். 'ஸ்லோ பால் யார்க்கர்', 'ஸ்லோ பால் பவுன்சர்' முறையில் பந்துவீசி நெருக்கடி கொடுத்தேன்,''என்றார்.

மில்லர் திட்டம்

இந்தியாவுக்கு எதிராக எப்போதும் சிறப்பாக விளையாடும் தென் ஆப்ரிக்காவின் மில்லர், 63 ரன் விளாசி வெற்றிக்கு கைகொடுத்தார். இவர் கூறுகையில்,'' அனைத்து அணிகளுக்கும் 'சுழலில்' வருண் சக்ரவர்த்தி தொல்லை கொடுத்தார். இவரை குறி வைப்பது என திட்டமிட்டோம். பந்துகள் எதிர்பார்த்த அளவுக்கு சுழன்று வரவில்லை. இதை பயன்படுத்தி விளாசினேன்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us