/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நான்காவது வெற்றியை நோக்கி இந்தியா: கனடா அணியுடன் மோதல்
/
நான்காவது வெற்றியை நோக்கி இந்தியா: கனடா அணியுடன் மோதல்
நான்காவது வெற்றியை நோக்கி இந்தியா: கனடா அணியுடன் மோதல்
நான்காவது வெற்றியை நோக்கி இந்தியா: கனடா அணியுடன் மோதல்
ADDED : ஜூன் 15, 2024 12:16 AM

லாடர்ஹில்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, கனடா அணிகள் மோதுகின்றன. இதில் கோலி விளாச வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று புளோரிடாவின் லாடர்ஹில் சென்ட்ரல் புரொவார்ட் கவுன்டி மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி முதல் மூன்று போட்டியில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்தி, 'சூப்பர்-8' சுற்றுக்கு சுலபமாக முன்னேறியது. கேப்டன் ரோகித் உடன் துவக்க வீரராக வரும் அனுபவ கோலியின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த மூன்று போட்டியில் மொத்தம் 5 ரன் (1, 4, 0, சராசரி 1.66) தான் எடுத்தார். அதிலும் அமெரிக்காவுக்கு எதிராக 'கோல்டன் டக்' அவுட்டானார். சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக 741 ரன் ( சராசரி 154.69) குவித்த இவர், தற்போது தடுமாறுவது அதிர்ச்சியாக உள்ளது.
மாற்றம் வருமா
கனடா உடனான போட்டியில் பங்கேற்பதற்காக நியூயார்க்கில் இருந்து 1850 கி.மீ., பயணம் செய்து புளோரிடா வந்துள்ளார் கோலி. இடமாற்றம் இவரது ஆட்டத்தில் ஏற்றம் தரலாம். இங்குள்ள ஆடுகளம் நியூயார்க் போல சிரமமாக இருக்காது என்பது சாதகமான விஷயம். இன்று ஜெய்ஸ்வால் களமிறக்கப்பட்டால், கோலி வழக்கமான 3வது இடத்தில் வரலாம். ரிஷாப் பன்ட்(36 ரன் எதிர், அயர்லாந்து, 42 ரன், எதிர் பாக்.,), சூர்யகுமாரின் (50 ரன், எதிர் அமெரிக்கா) சிறப்பான ஆட்டம் தொடரலாம். அமெரிக்காவுக்கு எதிராக 35 பந்தில் 31 ரன் எடுத்த ஷிவம் துபே நம்பிக்கை தருகிறார்.
குல்தீப் வாய்ப்பு
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பிரமாதமாக உள்ளது. பும்ரா (5 விக்கெட்), ஹர்திக் பாண்ட்யா(7), அர்ஷ்தீப்(7) மிரட்டுகின்றனர். சிராஜ் (1) சோபிக்கவில்லை. ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 'சூப்பர்-8' சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளன. இங்கு ஓரளவுக்கு சுழற்பந்துவீச்சு எடுபடும். இதை மனதில் வைத்து சிராஜ், அக்சர் படேலுக்கு 'ரெஸ்ட்' கொடுத்து 'ஸ்பின்னர்'களான குல்தீப், சகாலுக்கு வாய்ப்பு அளிக்கலாம்.
கனடா அணி, அயர்லாந்தை வென்ற உற்சாகத்தில் உள்ளது. இந்திய அணியை சமாளிப்பது கடினம். பேட்டிங்கில் ஆரோன் ஜான்சன், நிகோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மோவா கைகொடுக்கலாம். பவுலிங்கில் அசத்த கிரெய்ங் யங், பேரி மெக்கர்த்தி முயற்சிக்கலாம்.
பயிற்சி ரத்து
மழை காரணமாக இந்திய அணியின் நேற்றைய பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
பாவம் சுப்மன், அவேஷ்
இந்திய அணியில் இருந்து 'ரிசர்வ் வீரர்கள்' சுப்மன் கில், அவேஷ் கான் விடுவிக்கப்பட்டனர். விரைவில் தாயகம் திரும்பலாம். துவக்க வீரர் ரோகித் அல்லது கோலிக்கு காயம் ஏற்பட்டால், மாற்று வீரராக ஜெய்ஸ்வால் உள்ளார். இன்னொரு துவக்க வீரரான சுப்மன் கில் அணிக்கு தேவை இல்லை. ஷிவம் துபேக்கு பாதிப்பு ஏற்பட்டால், அவரது இடத்தை நிரப்ப ரிங்கு சிங் உள்ளார். வேகப்பந்துவீச்சு பலமாக இருப்பதால், அவேஷ் கானின் தேவை இருக்காது. ரிங்கு சிங், கலீல் அகமது அணியில் நீடிப்பர்.