/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அடிலெய்டில் அடி சறுக்கிய இந்தியா: ஆஸ்திரேலிய அணி அசத்தல்
/
அடிலெய்டில் அடி சறுக்கிய இந்தியா: ஆஸ்திரேலிய அணி அசத்தல்
அடிலெய்டில் அடி சறுக்கிய இந்தியா: ஆஸ்திரேலிய அணி அசத்தல்
அடிலெய்டில் அடி சறுக்கிய இந்தியா: ஆஸ்திரேலிய அணி அசத்தல்
ADDED : டிச 08, 2024 11:09 PM

அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டில் சொதப்பிய இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு, பிங்க் பால்), அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 180, ஆஸ்திரேலியா 337 ரன் எடுத்தன. தொடர்ந்து பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி, இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்து, ௨௯ ரன் பின் தங்கியிருந்தது.
கம்மின்ஸ் கலக்கல்: மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஸ்டார்க் 'வேகத்தில்' ரிஷாப் பன்ட் (28) அவுட்டானார். அஷ்வின் (7), ஹர்ஷித் ராணா (0) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய நிதிஷ் குமார், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க உதவினார். நிதிஷை (42), வெளியேற்றிய கம்மின்ஸ் தனது 5வது விக்கெட்டை பெற்றார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 175 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன் என்ற சுலப வெற்றி இலக்கை நிர்ணியித்தது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 5, போலந்து 3 விக்கெட் கைப்பற்றினர்.
எளிதான வெற்றி: பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மெக்ஸ்வீனி (10*), கவாஜா (9*) சேர்ந்து விரைவான வெற்றி தேடித் தந்தனர். இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையை எட்டியது.
ஆட்டநாயகன் விருதை டிராவிஸ் ஹெட் (140 ரன்) வென்றார். மூன்றாவது டெஸ்ட் (டிச. 14-18) பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.
தொடரும் ஆதிக்கம்
ஆஸ்திரேலிய அணி 13 பகலிரவு டெஸ்டில், 12ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. வெஸ்ட் இண்டீசிடம் (2024, பிரிஸ்பேன்) மட்டும் தோற்றது. அடிலெய்டு ஓவலில் நடந்த 8 'பிங்க் பால்' டெஸ்டிலும் வென்றுள்ளது.
1031 பந்து
இந்தியா-ஆஸி., இடையிலான மோதலில், குறைந்த பந்து (1031) வீசப்பட்ட இரண்டாவது போட்டியாக அடிலெய்டு டெஸ்ட் அமைந்தது. இதற்கு முன் இந்துார் போட்டியில் 1135 பந்து (2023) வீசப்பட்டன.
* விரைவாக முடிந்த பகலிரவு டெஸ்ட் (1031 பந்து) பட்டியலில் நான்காவது இடம் பெற்றது. முதலிடத்தில் இந்தியா-இங்கிலாந்து மோதிய ஆமதாபாத் போட்டி (842 பந்து, 2021) உள்ளது.
486 பந்து
அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி 486 பந்து தான் விளையாடியது. இந்தியா குறைந்த பந்துகள் சந்தித்த டெஸ்ட் போட்டி பட்டியலில் நான்காவது இடம் பிடித்தது. முதலிடத்தில் மான்செஸ்டர் போட்டி (349 பந்து, எதிர், இங்கிலாந்து, 1962) உள்ளது.
19வது முறை
டெஸ்ட் அரங்கில் இந்திய அணி 19வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அதிக முறை 10 விக்கெட்டில் வீழ்ந்த அணிகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து (25 முறை) உள்ளது.
* அதிக முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா (32 முறை) முதலிடத்தில் உள்ளது.
கம்மின்ஸ் அதிகம்
டெஸ்டில் 2018ல் இருந்து அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், லியான், தைஜுல் இஸ்லாம் (வங்கம்) முதலிடத்தில் உள்ளனர். தலா 12 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். அடுத்த இடத்தில் (தலா 11 முறை) இந்தியாவின் பும்ரா, அஷ்வின் உள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் கம்மின்ஸ், 13வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார்.
சபாஷ் நிதிஷ்
அடிலெய்டு டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் இந்தியா சார்பில் அதிகபட்ச ரன் எடுத்தார் நிதிஷ் குமார்(42, 42). பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக 41 ரன், இரண்டாவது இன்னிங்சில் 38 ரன் எடுத்தார். இதன் மூலம் தனது முதல் நான்கு இன்னிங்சில் 3ல் அதிக ரன் பதிவு செய்த இரண்டாவது இந்திய வீரரானார். சர்வதேச அளவில் 8வது வீரரானார். இதற்கு முன் கவாஸ்கர் தனது அறிமுக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் (1971) இது போல சாதித்தார்.
* பேட்டிங் வரிசையில் 7 அல்லது அதற்கு கீழே களமிறங்கி இரண்டு இன்னிங்சிலும் (அடிலெய்டு டெஸ்ட்) அதிக ரன் எடுத்த நான்காவது இந்திய வீரரானார் நிதிஷ். இதற்கு முன் சந்துபோர்டே(எதிர், இங்கி., ஈடன் கார்டன், 1961), தோனி (எதிர், இங்கி., பர்மிங்காம், 2011), அஷ்வின் (எதிர், இங்கி., லார்ட்ஸ், 2018) அசத்தினர்.
மூன்றாவது இடம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு தகுதி பெறும். தற்போது இந்திய அணி (57.29) மூன்றாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. தென் ஆப்ரிக்கா (59.26) இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்) உள்ளது. பைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய மூன்று டெஸ்டிலும் வெல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது.
நேரத்தை வீணாக்காதீர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''இந்திய வீரர்கள் 57 நாள் பயணமாக ஆஸ்திரேலியா வந்துள்ளனர். இதில் 5 டெஸ்ட் போட்டிக்கு 25 நாள், பிரதமர் லெவன் அணியுடன் 2 நாள் போக, மீதம் 30 நாள் உள்ளது. பெர்த் போட்டி நான்கு நாளில் முடிந்தது. அடிலெய்டு போட்டி இரண்டரை நாட்களுக்கும் குறைவான நேரத்தில் முடிந்ததுவிட்டது. மீதமுள்ள இரு நாளை இந்திய வீரர்கள் ஓட்டல் அறையில் வீணாக்கக் கூடாது. நீங்கள் கிரிக்கெட் விளையாட வந்துள்ளீர்கள். பும்ரா, அனுபவ ரோகித், கோலி தவிர மற்ற அனைத்து வீரர்களும் கண்டிப்பாக தீவிர பயிற்சியில் ஈடுபட வேண்டும்,''என்றார்.