/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தொடரை வென்றது இந்தியா: ரோகித் சர்மா சதம்
/
தொடரை வென்றது இந்தியா: ரோகித் சர்மா சதம்
ADDED : பிப் 09, 2025 11:34 PM

கட்டாக்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாச, இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், குல்தீப்பிற்கு பதிலாக கோலி, வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
வருண் திருப்பம்: இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், பென் டக்கெட் வலுவான துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரிகளாக விளாச, 10 ஓவரில் 75/0 ரன் எடுக்கப்பட்டன. 11வது ஓவரை வீசிய அறிமுக வருண் சக்ரவர்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது 'சுழலில்' சால்ட் (26) அவுட்டானார். 36 பந்தில் அரைசதம் எட்டிய டக்கெட் (65), ரவிந்திர ஜடேஜா பந்தில் வீழ்ந்தார். பின் ஜோ ரூட், ஹாரி புரூக் சேர்ந்து விவேகமாக விளையாடினர். இந்த சமயத்தில் ஹர்ஷித் பந்தை அவரசப்பட்டு துாக்கி அடித்தார் புரூக் (31). இதை நீண்ட துாரம் ஓடி சுப்மன் கச்சிதமாக பிடிக்க, பரிதாபமாக வெளியேறினார். இங்கிலாந்து அணி 35 ஓவரில் 200/3 என வலுவாக இருந்தது.
விக்கெட் சரிவு: இதற்கு பின் இந்திய பவுலர்கள் பிடியை இறுக்கினர். பாண்ட்யா பந்தில் ஜோஸ் பட்லர் (34) அவுட்டானார். அரைசதம் கடந்த ஜோ ரூட் (69), ஒருநாள் அரங்கில் 5வது முறையாக ஜடேஜா வலையில் சிக்கினார். ஓவர்டன் (6), அட்கின்சன் (3) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் அடில் ரஷித், லிவிங்ஸ்டன் அசத்தினர். ஷமி ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த ரஷித் (14) ரன் அவுட்டானார். லிவிங்ஸ்டனும் (41) ரன் அவுட்டானார். இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 304 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.
மின் விளக்கு பிரச்னை: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடி துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாச, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 6.1 ஓவரின் போது, மைதானத்தின் மின் விளக்கு கோபுரம் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டது. விளக்குகள் எரியாததால், ஆட்டம் 35 நிமிடம் நிறுத்தப்பட்டது.
கோலி ஏமாற்றம்: பின் ஆட்டம் துவங்கியதும், தனது விளாசலை தொடர்ந்தார் ரோகித். 30 பந்தில் அரைசதம் எட்டினார். இந்திய அணி 10 ஓவரில் 77/0 ரன் எடுத்தது. அரைசதம் கடந்த சுப்மன் (60), ஓவர்டன் பந்தில் போல்டானார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோலி (5), ரஷித் 'சுழலில்' அவுட்டாகி ஏமாற்றினார். ரஷித் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த ரோகித், 76 பந்தில் சதம் எட்டினார். இது, ஒருநாள் அரங்கில் இவரது 32வது சதம். கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய இவர், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். லிவிங்ஸ்டன் பந்தில் ரோகித் (119 ரன், 90 பந்து, 12 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட்டானார். ஸ்ரேயாஸ் (44) ரன் அவுட்டனார். ராகுல் (10), ஹர்திக் பாண்ட்யா (10) நிலைக்கவில்லை.
கடைசி கட்டத்தில் அக்சர் படேல் கைகொடுத்தார். ரூட் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த ஜடேஜா, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 44.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 308 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அக்சர் (41), ஜடேஜா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் பிப்.12ல் ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.
338 'சிக்சர்'
ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் கெய்லை (வெ.இ., 331 சிக்சர்) முந்தி இரண்டாவது இடம் பிடித்தார் ரோகித் சர்மா (338 சிக்சர்). நேற்று வாணவேடிக்கை காட்டிய இவர், 7 சிக்சர் விளாசினார். முதல் இடத்தில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி (351) உள்ளார்.
ஜோ ரூட் சாதனை
ஒருநாள் அரங்கில் அதிக முறை 50 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் என சாதனை படைத்தார் ஜோ ரூட் (56 முறை, 40 அரைசதம் + 16 சதம்). அடுத்த இடத்தில் இயான் மார்கன் (55 முறை, 42 அரைதம் + 13 சதம்) உள்ளார்.
'சீனியர்' வருண்
ஒருநாள் அரங்கில் அறிமுகமான இரண்டாவது இந்திய சீனியர் வீரரானார் வருண் சக்ரவர்த்தி (33 ஆண்டு, 164 நாள்). முதலிடத்தில் பரூக் இன்ஜினியர் (36 ஆண்டு, 138 நாள், எதிர், இங்கி., லீட்ஸ், 1974) உள்ளார். இந்திய அணியின் தொப்பியை வருணுக்கு ஜடேஜா வழங்கினார். நேற்றைய அறிமுக போட்டியில் அசத்திய வருண், ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
50வது முறை
ஒருநாள் போட்டிகளில் நேற்று 50வது முறையாக கேப்டனாக களமிறங்கினார் ரோகித். 50 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய 8வது வீரரானார். இப்பட்டியலில் தோனி (200 போட்டி) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடங்களில் அசார் (174), கங்குலி (146), கோலி (95), டிராவிட் (79), கபில் தேவ் (74), சச்சின் (73) உள்ளனர்.
* 2017ல் கேப்டனாக களமிறங்கிய ரோகித், 50 போட்டிகளில் 36ல் வெற்றி தேடித் தந்துள்ளார். 12 தோல்வி, ஒரு 'டை', ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
மூன்றாவது இடம்
ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்தவர்களில் மூன்றாவது இடம் பெற்றார் ரோகித் (32). முதல் இரு இடங்களில் சக வீரர்களான கோலி (50), சச்சின் (49)) உள்ளனர். நான்காவது இடத்தில் பாண்டிங் (ஆஸி., 30 சதம்) உள்ளார்.
* சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் (49, டெஸ்டில் 12, ஒருநாள் போட்டியில் 32, டி-20ல் 5). முதல் இரு இடங்களில் சச்சின் (100, டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 49), கோலி(81, டெஸ்டில் 30, ஒருநாள் போட்டியில் 50, டி-20ல் 1) உள்ளனர்.
* ஒருநாள் அரங்கில் நேற்று தனது இரண்டாவது அதிவேக சதம் அடித்தார் ரோகித் (76 பந்து). ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது அதிவேக சதத்தை (63 பந்து, டில்லி, 2023) பதிவு செய்துள்ளார்.