/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஹா அஷ்வின், ஆகாஷ் * மழையால் ஆட்டம் பாதிப்பு
/
ஆஹா அஷ்வின், ஆகாஷ் * மழையால் ஆட்டம் பாதிப்பு
ADDED : செப் 27, 2024 10:59 PM

கான்பூர்: இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் கான்பூர் டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டது.
இந்தியா வந்துள்ள வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது, கடைசி டெஸ்ட், உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நேற்று துவங்கியது.
'டாஸ்' தாமதம்
முதல் நாள் இரவு பெய்த மழை காரணமாக, போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேச அணியில் டஸ்கின் அகமது, நாகித் நீக்கப்பட்டு தய்ஜுல் இஸ்லாம், காலேத் அகமது சேர்க்கப்பட்டனர்.
ஆகாஷ் 'இரண்டு'
வங்கதேச அணிக்கு ஷாத்மன், ஜாகிர் ஹசன் ஜோடி துவக்கம் தந்தது. ஆகாஷ் தீப் 'வேகத்தில்' ஜாகிர் ஹசன் (0), வெளியேறினார். மீண்டும் மிரட்டிய ஆகாஷ், இம்முறை ஷாத்மனை (24) அவுட்டாக்கினார். வங்கதேச அணி 29/2 ரன் என திணறியது.
அஷ்வின் நம்பிக்கை
பின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ, மோமினுல் இணைந்தனர். உணவு இடைவேளைக்குப் பின், அஷ்வின் 'சுழலில்' ஷாண்டோ (31) அவுட்டானார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்திருந்த போது, கன மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மழை நீடிக்கவே, 35 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முன்னதாக நிறுத்தப்பட்டது. மோமினுல் ஹக் (40), முஷ்பிகுர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2, அஷ்வின் 1 விக்கெட் சாய்த்தனர்.
2015க்குப் பின்...
கடந்த 2015ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில், 'டாஸ்' வென்ற இந்தியா பீல்டிங் செய்தது. மொத்தம் 81 ஓவர் மட்டும் வீசப்பட்ட இப்போட்டி மழையால் 'டிரா' ஆனது.
தற்போது 9 ஆண்டுக்குப் பின், சொந்தமண்ணில் இந்திய அணி, 'டாஸ்' வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்துள்ளது. முதல் 3 நாள் மழையால் போட்டி பாதிக்கப்படலாம் என்பதால், ரோகித் சர்மா இம்முடிவு எடுத்திருக்கலாம்.
420 விக்.,
ஆசிய மண்ணில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் கும்ளேவை (419) முந்தி, இரண்டாவது இடம் பிடித்தார் இந்தியாவின் அஷ்வின் (420 விக்.,).
* முதலிடத்தில் இலங்கையின் முரளிதரன் (612) உள்ளார். இலங்கையின் ஹெராத் (354), இந்தியாவின் ஹர்பஜன் சிங் (300) 4, 5வது இடங்களில் உள்ளனர்.
குல்தீப் சோகம்
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 29. கடந்த 2017, தரம்சாலா டெஸ்டில் (எதிர்-ஆஸி.,) அறிமுகம் ஆனார். 12 டெஸ்டில் பங்கேற்றுள்ளார். சொந்தமண்ணான கான்பூரில், தனது முதல் டெஸ்டில் நேற்று களமிறங்குவார் என நம்பப்பட்டது. ஆனால் இந்திய அணியில் வழக்கம் போல மூன்று 'வேகம்', இரண்டு சுழற்பந்து வீச்சாளர் இடம் பெற்றனர்.
இதனால் டெஸ்டில் அறிமுகம் ஆகி 7 ஆண்டு போதும், உள்ளூர் ரசிகர்கள் முன் விளையாட முடியாமல் சோகம் அடைந்தார் குல்தீப்.
ரசிகர் மீது தாக்குதலா
நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, புலி ('டைகர்') போல உடை அணிந்திருந்த வங்கதேச ரசிகர் ரோபிக்கும், அங்கிருந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ரோபியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மயங்கிய இவரை, போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிகிச்சைக்குப் பின் இவர் கூறுகையில்,'' இந்திய ரசிகர்கள் யாரும் என்னை தாக்கவில்லை. வயிற்றுப் போக்கு காரணமாக மயங்கி விட்டேன். போலீசார் என்னை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்,'' என்றார்.
வாய்ப்பு எப்படி
கான்பூரில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இடியுடன் கூடிய மழை வர 98 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் இரண்டாவது நாள் முழுவதும் போட்டி நடப்பது சந்தேகம்.