/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
எப்போ வருவார் பும்ரா * எதிர்பார்ப்பில் மும்பை அணி
/
எப்போ வருவார் பும்ரா * எதிர்பார்ப்பில் மும்பை அணி
ADDED : மார் 14, 2025 11:06 PM

புதுடில்லி: காயம் முழுமையாக குணமடையாத நிலையில் ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகளில் பும்ரா பங்கேற்க மாட்டார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 31. ஆஸ்திரேலிய மண்ணில் மிரட்டிய இவர் 32 விக்கெட் சாய்த்தார். கடைசி, சிட்னி டெஸ்டில் காயத்தால் பாதியில் விலகினார்.
இதன் பின் போட்டிகளில் பங்கேற்காத பும்ரா, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டார். காயத்தில் இருந்து மீளாத நிலையில், இவருக்குப் பதில் வருண் சக்ரவர்த்தி இடம் பிடித்தார்.
தற்போது மார்ச் 22ல் ஐ.பி.எல்., தொடர் துவங்குகிறது. பும்ரா மும்பை அணியில் இடம் பெற்றுள்ளார். முதல் போட்டியில் (மார்ச் 23, சென்னை) மும்பை அணி, சென்னையை எதிர்கொள்கிறது. அடுத்து குஜராத் (29), கோல்கட்டா (31) அணிகளை சந்திக்க உள்ளது.
இந்த போட்டிகளில் பும்ரா பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. ஏனெனில் ஜனவரி மாதம் முழுவதும் ஓய்வில் இருக்குமாறு அட்வைஸ் செய்யப்பட்ட பும்ரா, தற்போது தான் மீண்டு வருகிறார். இவர் எப்போது போட்டிகளில் பங்கேற்பார் என உறுதியாக சொல்ல முடியாது.
இதுகுறித்து வெளியான செய்தியில்,' பும்ரா முழு அளவில் மீண்டு வர, சிறிது கால அவகாசம் தர வேண்டும். அடுத்து ஜூன் மாதம் இந்திய அணி இங்கிலாந்து செல்ல உள்ளதால், பும்ரா விஷயத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு அவசரம் காட்டாது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கலில் பாண்ட்யா
மும்பை அணி 2024 சீசனில் கடைசி இடத்துக்கு (10) தள்ளப்பட்டது. ஒருவேளை பும்ரா இல்லை எனில், டிரன்ட் பவுல்ட், கார்பின், தீபக் சஹாரை வைத்து தான், கேப்டன் பாண்ட்யா சமாளிக்க வேண்டும்.