/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சிறந்த வீரர் பும்ரா * ஐ.சி.சி., கவுரவம்
/
சிறந்த வீரர் பும்ரா * ஐ.சி.சி., கவுரவம்
ADDED : ஜன 28, 2025 11:25 PM

துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீரராக (2024) பும்ரா தேர்வானார். இவ்விருது பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
சிறந்த டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஒருநாள் அரங்கில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டனர். தவிர, ஐ.சி.சி., சிறந்த டெஸ்ட் அணியிலும் பும்ராவுக்கு இடம் கிடைத்தது.
இந்த வரிசையில் 2024ம் ஆண்டில் சிறந்த வீரருக்கான 'சர் கேரிபீல்டு சோபர்ஸ்' விருதுக்கு, பும்ரா 31, தேர்வு செய்யப்பட்டார்.
2024 'டி-20' உலக கோப்பை தொடரில் 15 விக்கெட் (சராசரி 8.26) சாய்த்து, இந்தியா கோப்பை வெல்ல உதவிய பும்ரா, தொடர் நாயகன் ஆனார்.
13 டெஸ்டில் 71 விக்கெட் (சராசரி 14.92) சாய்த்தார். டெஸ்ட் தரவரிசையில் எப்போதும் இல்லாத வகையில், அதிக புள்ளி (907) எடுத்த முதல் இந்திய பவுலர் ஆனார் பும்ரா. இதையடுத்து ஐ.சி.சி., சிறந்த வீரராக தேர்வாகி உள்ளார்.
ஐ.சி.சி., பாராட்டு
இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2024ல் டெஸ்ட், 'டி-20'ல் ஆதிக்கம் செலுத்திய பும்ராவுக்கு மதிப்புமிக்க 'சர் கேரிபீல்டு சோபர்ஸ்,' விருது வழங்கப்படுகிறது.
டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இவரது திறமை பிரதிபலித்தது. எந்த இந்திய பவுலரை விடவும் அதிகமாக, 907 புள்ளி எடுத்து சாதனை படைத்தார்.
மூன்றுவித கிரிக்கெட்டிலும் துல்லியம், திறமையால், தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு சாதனை மேல் சாதனை படைத்து, உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.