/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பதற வைத்த பயிற்சி ஆடுகளம்: இந்திய வீரர்கள் அதிருப்தி
/
பதற வைத்த பயிற்சி ஆடுகளம்: இந்திய வீரர்கள் அதிருப்தி
பதற வைத்த பயிற்சி ஆடுகளம்: இந்திய வீரர்கள் அதிருப்தி
பதற வைத்த பயிற்சி ஆடுகளம்: இந்திய வீரர்கள் அதிருப்தி
ADDED : டிச 23, 2024 10:58 PM

மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி மேற்கொள்ள, இந்திய அணிக்கு பழைய ஆடுகளமும் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய ஆடுகளமும் அளிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) வரும் டிச. 26ல் மெல்போர்னில் துவங்குகிறது.
இந்தியா அதிருப்தி: மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சிக்கு என தனித்தனியாக இரு ஆடுகள பகுதிகள் உள்ளன. புதிய ஆடுகளத்தை பார்க்க கூட இந்திய அணியினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், பழைய ஆடுகளத்தில் இரு நாள் (டிச. 21, 22) பயிற்சி மேற்கொண்டனர். இங்கு பந்துகள், கணிக்க முடியாத வகையில் 'பவுன்ஸ்' ஆகின. 'த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட்' தயாநந்த் கரானி வீசிய பந்து கேப்டன் ரோகித் சர்மாவின் இடது முழங்காலை தாக்கியது. ராகுல், ஆகாஷ் தீப்பின் கையை பந்து பதம் பார்க்க, பதறிப் போயினர்.
இந்திய அணியினர் தங்களது பயண விபரங்களை இரண்டு மாதத்திற்கு முன்பே மெல்போர்ன் கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பினர். ஆனாலும், புதிய பயிற்சி ஆடுகளத்தை பயன்படுத்த அனுமதி மறுத்து, சதி செய்தனர். பழைய களத்தின் தன்மை குறித்து இந்திய வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.
ஆஸ்திரேலிய வீரர்கள் சாமர்த்தியமாக நேற்று தான் பயிற்சியை துவக்கினர். இவர்களுக்கு புதிய பயிற்சி ஆடுகளத்தை பயன்படுத்த அனுமதி அளித்தது சர்ச்சையை கிளப்பியது. இங்கு பந்துகள் தரமான உயரத்தில் 'பவுன்ஸ்' ஆகின.
பராமரிப்பாளர் விளக்கம்: இது குறித்து மெல்போர்ன் ஆடுகள பராமரிப்பாளர் மேட் பேஜ் கூறுகையில்,''பொதுவாக டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு மூன்று நாளுக்கு முன்பு தான் புதிய பயிற்சி ஆடுகளத்தை பயன்படுத்த அனுமதிப்போம். டிச. 26ல் தான் டெஸ்ட் துவங்குகிறது. இந்திய வீரர்கள் முன்னதாகவே பயிற்சியை துவக்கினர். ஒருவேளை நேற்று விரும்பியிருந்தால், புதிய ஆடுகளத்தில் பயிற்சி செய்திருக்கலாம். ஆஸ்திரேலிய வீரர்கள் சற்று தாமதமாக பயிற்சியை துவக்கியதால், புதிய பயிற்சி ஆடுகளம் அனுமதிக்கப்பட்டது.
'வேகம்' சாதகம்: ஏழு ஆண்டுகளுக்கு முன் மெல்போர்ன் ஆடுகளம் மந்தமானதாக இருந்தது. தற்போது, விறுவிறுப்பை அதிகரிக்க, 'வேகத்திற்கு' சாதகமான ஆடுகளத்தை அமைத்துள்ளோம். இம்முறை வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். 6 மி.மீ., அளவுக்கு புல் காணப்படுகிறது. புதிய பந்தை சமாளிப்பது சவாலாக இருக்கும். போகப் போக பேட்டர்கள் ரன் சேர்க்கலாம். ஆடுகளத்தில் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. இதனால் 'ஸ்பின்னர்'கள் சாதிப்பது கடினம்,''என்றார்.
அஷ்வினுக்கு கவாஸ்கர் ஆதரவு
சமீபத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 38, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதுவரை 106 டெஸ்ட் (537 விக்.,), 116 ஒருநாள் (156), 65 சர்வதேச 'டி-20' (72) போட்டிகளில் விளையாடி உள்ளார். சீனியர், அனுபவ வீரரான இவருக்கு ஒரு முறை கூட கேப்டன்/துணை கேப்டன் பதவி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ''இந்தியாவின் சிறந்த கேப்டனாக அஷ்வின் இருந்திருப்பார். ஆனால் அவருக்கு துணை கேப்டன் பதவி கூட வழங்கப்படவில்லை. இதனால் தான் கேப்டன் ரோகித் சர்மா, அஷ்வினின் 100வது டெஸ்டில் அணியை வழிநடத்தும்படி கேட்டுக்கொண்டார். அன்னிய மண்ணில் நடந்த டெஸ்டில் அஷ்வினுக்கு சரியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. உலகின் 'நம்பர்-1' பவுலரான இவரை 'லெவன்' அணியில் சேர்க்காததற்கு, ஆடுகளத்தை காரணமாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது,'' என்றார்.

