/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
/
இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
ADDED : அக் 27, 2024 11:11 PM

புதுடில்லி: இந்திய டெஸ்ட் அணி மாற்றத்தை நோக்கி நகர்கிறது. ரோகித், கோலி, அஷ்வின் உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு நிகரான, அடுத்த தலைமுறை வீரர்களை கண்டறிய வேண்டும். தரமான பவுலர்கள் இல்லாதது பெரும் பலவீனம்.
சொந்த மண்ணில் சொதப்பிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-2025) பட்டியலில் இந்தியா (62.82 சதவீத புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறது. வரும் 6 டெஸ்டில் (எதிர், நியூசி., 1, ஆஸி., 5) 4ல் வென்றாக வேண்டும். தவறினால், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விக்கு ஏற்ப, உலக டெஸ்ட் பைனலுக்கு (ஜூன் 11-15, 2025, லார்ட்ஸ்) இந்தியா தகுதி பெறுவது உறுதி செய்யப்படும்.அடுத்து நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் (2025-27) சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா 37, கோலி 35, அஷ்வின் 38, ரவிந்திர ஜடேஜா 35, விளையாடுவது சந்தேகம். உலகத் தரம் வாய்ந்த இந்த நால்வரும், ஒருவர் பின் ஒருவராக ஓய்வு அறிவிக்கலாம். இதனால் இந்திய அணியில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
சுதர்சன் வாய்ப்பு: துவக்கத்தில் இளம் ஜெய்ஸ்வால் ஜொலிப்பது பலம். டெஸ்டில் இருந்து ரோகித் ஓய்வு பெறும் போது, அவரது துவக்க இடத்தை பிடிக்க அபிமன்யு ஈஸ்வரன் (பெங்கால்), ருதுராஜ் (மஹாராஷ்டிரா), தமிழகத்தின் சாய் சுதர்சன் என மூவர் போட்டியிடுகின்றனர். ஈஸ்வரன் 99 முதல் தர போட்டிகளில் 27 சதங்களுடன் 7638 ரன் (சராசரி 49.92) குவித்துள்ளார். வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஞ்சி கோப்பை பைனல் உட்பட முக்கிய போட்டிகளில் தடுமாறுவது இவரது பலவீனம்.
'ஒயிட் பால்' கிரிக்கெட்டில் அசத்தும் ருதுராஜ், 35 முதல் தர போட்டிகளில் 7 சதம் மட்டுமே அடித்துள்ளார். இடது கை பேட்டரான சுதர்சன் விவேகமாக ஆடக் கூடியவர். பெரிய ஸ்கோரை எட்ட விரும்புவார். டெஸ்ட் போட்டிக்கான ஆட்ட நுணுக்கம் அறிந்தவர். சமீபத்தில் சர்ரே கவுன்டி அணிக்காக விளையாடினார். பேட்டிங் வரிசையில் துவக்க வீரர் அல்லது மூன்றாவது இடத்தில் அசத்தும் திறன் பெற்றவர்.
ரிஷாப் நிரந்தரம்: கோலியின் இடத்தை பிடிக்க தேவ்தத் படிக்கல் (கர்நாடகா) ஆசைப்படுகிறார். அறிமுக டெஸ்டில் அரைசதம் (எதிர், இங்கிலாந்து, 2024, தர்மசாலா) அடித்தவர். 'ஸ்டைலாக' பேட் செய்யக்கூடியவர். தோனியை போல மின்னுகிறார் ரிஷாப் பன்ட். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இவரது கீப்பர்-பேட்டர் இடத்திற்கு ஆபத்தில்லை. சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சர்பராஸ் கான் திறமை நிரூபித்தார். 6வது இடத்திற்கு பொருத்தமானவர் தானா என்பதை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிவு செய்யும்.
வரமாக பும்ரா: வேகப்பந்துவீச்சு பலவனீமாக உள்ளது. ஷமி அணிக்கு திரும்பினாலும், அதிக காலம் விளையாட வாய்ப்பு இல்லை. பும்ரா தான் இந்தியாவுக்கு கிடைத்த வரம். இவருக்கு நிகரான பவுலர்களாக சிராஜ், ஆகாஷ் தீப் இல்லை. அவேஷ் கான், கலீல் அகமது நல்ல வேகத்தில் பந்துவீசினாலும் உடற்தகுயில்லாமல் தவிக்கின்றனர். நவ்தீப் செய்னி, உம்ரான் மாலிக், முகேஷ் குமார் 'வேகம்' எடுபடுவதில்லை. மயங்க் யாதவ் நம்பிக்கை தருகிறார். இவர் காயம் அடையாமல் இருந்தால், பும்ராவுக்கு பக்கபலமாக இருப்பார். வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' இடத்திற்கு ஹர்திக் பாண்ட்யா மட்டும் உள்ளார். நிதிஷ் ரெட்டி பெயரளவுக்கு இருக்கிறார்.
வாஷிங்டன் நம்பிக்கை: ரவிந்திர ஜடேஜாவை போன்ற 'ஆல்-ரவுண்டர்' தான் அக்சர் படேல். ஆனால், ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் தடுமாறுவார். தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய மண்ணில் ஜடேஜா பேட்டராக மட்டும் அசத்துவார். அந்த அளவுக்கு பேட்டிங்கில் அக்சர் கைகொடுக்க மாட்டார்.
அஷ்வின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் பிடிக்கலாம். சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான புனே டெஸ்டில் 11 விக்கெட் சாய்த்தார். 2021ல் ஆஸ்திரேலியவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில், பேட்டிங்கிலும் கைகொடுத்தார். அஷ்வின்-ஜடேஜாவுக்கு பின் 'ஸ்பின்னர் ஆல்-ரவுண்டராக' வாஷிங்டன் வலம் வரலாம்.