/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் இமாலய வெற்றி: மந்தனா சதம் விளாசல்
/
இந்திய பெண்கள் இமாலய வெற்றி: மந்தனா சதம் விளாசல்
ADDED : ஜூன் 17, 2024 12:11 AM

பெங்களூரு: மந்தனா சதம் கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி 143 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. பெங்களூருவில் முதல் போட்டி நடந்தது. இந்திய 'லெவன்' அணியில் சீனியர் 'லெக் ஸ்பின்னர்' ஆஷா சோபனா 33, அறிமுகமானார்.
மந்தனா அபாரம்
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (7) ஏமாற்றினார். ஹேமலதா (12), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (10), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (17), ரிச்சா கோஷ் (3) சோபிக்கவில்லை. தீப்தி சர்மா (37) ஓரளவு கைகொடுத்தார். மசாபதா கிளாஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்மிருதி மந்தனா, 116 பந்தில் சதம் விளாசினார். தனிநபராக அசத்திய இவர், 117 ரன் (ஒரு சிக்சர், 12 பவுண்டரி) எடுத்தார்.
இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன் எடுத்தது. பூஜா (31), ஆஷா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆஷா அசத்தல்
சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் (4), அன்னேக் போஷ் (5) ஏமாற்றினர். சுனே லுாஸ் (33), மரிசன்னே காப் (24) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற தென் ஆப்ரிக்க அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஆஷா சோபனா 4, தீப்தி சர்மா 2 விக்கெட் சாய்த்தனர்.
இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் ஜூன் 19ல் நடக்கவுள்ளது
7000 ரன்
மந்தனா, தனது 58வது ரன்னை எட்டிய போது சர்வதேச அரங்கில் 7000 ரன் எடுத்த 2வது இந்திய வீராங்கனையானார். இதுவரை டெஸ்டில் 480 (6 போட்டி), ஒருநாள் போட்டியில் 3359 (83), 'டி-20'யில் 3220 (133) என, 7059 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே மிதாலி ராஜ் 10868 ரன் (699+7805+2364) குவித்துள்ளார். தவிர, இம்மைல்கல்லை எட்டிய 6வது சர்வதேச வீராங்கனையானார் மந்தனா.
200 போட்டி
இந்தியாவின் தீப்தி சர்மா, தனது 200வது சர்வதேச போட்டியில் பங்கேற்றார். இதுவரை 4 டெஸ்ட் (317 ரன்), 87 ஒருநாள் (2019), 109 'டி-20' (1020) போட்டிகளில் விளையாடி உள்ளார். நேற்று இவர், தனது 18வது ரன்னை எட்டிய போது ஒருநாள் அரங்கில் 2000 ரன் என்ற மைல்கல்லை அடைந்தார்.