/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: ஸ்மிருதி, ஷைபாலி அரைசதம் விளாசல்
/
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: ஸ்மிருதி, ஷைபாலி அரைசதம் விளாசல்
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: ஸ்மிருதி, ஷைபாலி அரைசதம் விளாசல்
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: ஸ்மிருதி, ஷைபாலி அரைசதம் விளாசல்
ADDED : டிச 28, 2025 11:31 PM

திருவனந்தபுரம்: நான்காவது 'டி-20' போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 30 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா அரைசதம் கடந்தனர்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, 3-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சமாரி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
சூப்பர் துவக்கம்: இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி வர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். 'பவர்-பிளே' ஓவரின் (1-6) முடிவில் இந்திய அணி 61/0 ரன் எடுத்திருந்தது. நிமாஷா மதுஷானி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஷைபாலி, 'ஹாட்ரிக்' அரைசதம் விளாசினார். ஸ்மிருதி, 35 பந்தில் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 162 ரன் சேர்த்த போது நிமாஷா பந்தில் ஷைபாலி (79 ரன், 12x4, 1x6) அவுட்டானார். ஸ்மிருதி 80 ரன்னில் (11x4, 3x6) ஆட்டமிழந்தார்.
ரிச்சா விளாசல்: அடுத்து வந்த ரிச்சா கோஷ், அதிவிரைவாக ரன் சேர்த்தார். கவிஷா தில்ஹாரி வீசிய 19வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என, 23 ரன் விளாசினார். இந்திய அணி 20 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 221 ரன் எடுத்தது. ரிச்சா கோஷ் (40), ஹர்மன்பிரீத் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
சமாரி அரைசதம்: கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஹாசினி, கேப்டன் சமாரி ஜோடி நம்பிக்கை தந்தது. முதல் விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த போது அருந்ததி ரெட்டி பந்தில் ஹாசினி (33) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய சமாரி, 34 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 52 ரன் எடுத்திருந்த போது வைஷ்ணவி 'சுழலில்' சிக்கினார்.
இமேஷா துலானி (29) 'ரன்-அவுட்' ஆனார். வைஷ்ணவி பந்தில் ஹர்ஷிதா (20) சரணடைந்தார். கவிஷா (13) நிலைக்கவில்லை. ஸ்ரீசரணி பந்தில் ராஷ்மிகா (5) போல்டானார். இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. நிலாக் ஷிகா (23), கவுஷினி (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அருந்ததி, வைஷ்ணவி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகி விருதை ஸ்மிருதி வென்றார். ஐந்தாவது போட்டி டிச. 30ல் திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது.
10,000 ரன்
இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 10,000 ரன்னை எட்டினார். இதுவரை 281 போட்டியில் (7 டெஸ்ட், 117 ஒருநாள், 157 'டி-20'), 10,014 ரன் (டெஸ்ட் 629, ஒருநாள் 5322, 'டி-20' 4063) குவித்துள்ளார். இம்மைல்கல்லை அடைந்த 4வது வீராங்கனையானார். ஏற்கனவே இந்தியாவின் மிதாலி ராஜ் (10,868 ரன்), நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (10,652), இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ட்ஸ் (10,273) இந்த இலக்கை கடந்தனர்.
சூப்பர் ஜோடி
ஸ்மிருதி-ஷைபாலி ஜோடி, பெண்களுக்கான சர்வதேச 'டி-20' அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் (162) குவித்த இந்திய ஜோடியானது. இதற்கு முன், இதே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 143 ரன் (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2019) எடுத்திருந்தது.
இது அதிகம்
பெண்களுக்கான சர்வதேச 'டி-20' போட்டி வரலாற்றில் இந்திய அணி, தனது அதிகபட்ச ஸ்கோரை (221/2) பதிவு செய்தது. இதற்கு முன், 217/4 ரன் (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2024, மும்பை) எடுத்திருந்தது.
80 சிக்சர்
சர்வதேச 'டி-20' போட்டி அரங்கில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீராங்கனையானார் ஸ்மிருதி. இதுவரை 80 சிக்சர் அடித்துள்ளார். அடுத்த இரு இடங்களில் ஹர்மன்பிரீத் கவுர் (78 சிக்சர்), ஷைபாலி வர்மா (69) உள்ளனர்.

