/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சர்ச்சை கிளப்பிய ராகுல் 'அவுட்'
/
சர்ச்சை கிளப்பிய ராகுல் 'அவுட்'
ADDED : நவ 22, 2024 10:47 PM

ஸ்டார்க் வீசிய பந்து ராகுலை கடந்து சென்றது. பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் கேரி, 'அவுட்' கேட்டார். கள அம்பயர் கெட்டில்பரோ (இங்கிலாந்து) மறுத்தார். கம்மின்ஸ் 'ரிவியு' செய்தார். 'ரீப்ளேயில்' பந்து ராகுல் பேட்டை கடந்து சென்ற பின், அவரது பேட், கால் பேடில் பட்டது தெரிந்தது.
அப்போது ஸ்னிக்கோ மீட்டரில் 'ஸ்பைக்' காண்பித்தது. பந்து பேட்டில் பட்டது உறுதியாக தெரியவில்லை என்ற போதும், மூன்றாவது அம்பயர் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ராகுலுக்கு அவுட் கொடுத்தது சர்ச்சை கிளப்பியது. வேறு வழியில்லாத நிலையில், மறுப்பு தெரிவித்துக் கொண்டே வெளியேறினார் ராகுல்.
முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,''போதிய ஆதாரம் இல்லாமல் மைதான அம்பயர் முடிவை திரும்ப பெற்றிருக்கக் கூடாது. பேட், கால் பேடில் பட்ட போது தான் 'ஸ்பைக்' தெரிந்தது. மாறாக முதலில் பேட், அடுத்து பேடில் பட்டது என்றால் ஸ்னிக்கோ மீட்டரீல் இரண்டு 'ஸ்பைக்' காண்பித்து இருக்க வேண்டும். டிவி அம்பயருக்கு தவறான வீடியோ வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
அஷ்வின் பரிதாபம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு ஐந்தாவது முறையாக சென்றுள்ளார் அஷ்வின். ஒருமுறை கூட பெர்த் மைதானத்தில் களமிறங்கிய இந்திய லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை. இம்முறை ஆஸ்திரேலிய அணியில் 4 இடது கை பேட்டர் உள்ள நிலையில், அஷ்வின் எப்படியும் இடம் பெறுவார் என நம்பப்பட்டது.
ஆனால், 105 டெஸ்டில், 536 விக்கெட் சாய்த்து, 6 சதம் அடித்த அனுபவ அஷ்வினுக்கு மீண்டும் ஏமாற்றம் கிடைத்தது. மாறாக, 6 டெஸ்டில் 22 விக்கெட் மட்டும் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். இதேபோல ஏற்கனவே விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் உள்ள நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டது அணித் தேர்வில் உள்ள குழப்பத்தை காட்டியது.
கவாஸ்கர் ஆவேசம்
இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,'' அஷ்வின் (536), ஜடேஜா (319) இணைந்து டெஸ்டில் 855 விக்கெட் சாய்த்த அனுபவம் கொண்டவர்கள். ஆஸ்திரேலிய மைதானம் பெரியது என்பதால், இவர்களை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் புதிய நிர்வாகம், புதிய திட்டம் வைத்திருக்கலாம்,'' என்றார்.
நாட்டுக்காக...
பெர்த் டெஸ்டில் அறிமுகமான நிதிஷ் குமார் நம்பிக்கை அளித்தார். 73/6 என இந்தியா தவித்த நிலையில், 8வது இடத்தில் களமிறங்கினார். ரிஷாப், நிதிஷ் சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்தனர். ஆந்திராவை சேர்ந்த நிதிஷ், 41 ரன் (59 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.
இவர் கூறுகையில்,''நான் அதிகம் மதிக்கும் வீரர் கோலி. அவரிடம் இருந்து அறிமுக போட்டிக்கான தொப்பியை பெற்றது மகிழ்ச்சியான தருணம்.
பெர்த் ஆடுகளம் வேகத்திற்கு சாதகமானது என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. அப்போது பயிற்சியாளர் காம்பிர் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. 'பவுன்சர்' பந்துகளை உன் தோளில் துணிச்சலாக எதிர்கொள். இது நாட்டுக்காக குண்டுகளை சந்திப்பது போன்றது' என ஊக்கம் அளித்தார். இதன்படி அச்சப்படாமல் விளையாடினேன்.
சமீபத்தில் மெல்போர்னில் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடியது கைகொடுத்தது. 'வேகங்கள்' மிரட்டியதால், லியான் சுழலில் 2 பவுண்டரி விளாசி, விரைவாக ரன் சேர்க்க முயற்சித்தேன்.
இந்திய ஆடுகளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது பெர்த். இங்கு 'பவுன்ஸ்' அதிகம். பவுலர்களுக்கு நன்கு ஒத்துழைக்கிறது. கேப்டனாக பும்ரா சிறப்பாக செயல்படுகிறார். சரியான நேரத்தில் பவுலர்களை மாற்றுகிறார்,''என்றார்.