/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சிட்னி டெஸ்ட் தோல்வி: பும்ரா வருத்தம்
/
சிட்னி டெஸ்ட் தோல்வி: பும்ரா வருத்தம்
UPDATED : ஜன 05, 2025 11:16 PM
ADDED : ஜன 04, 2025 11:09 PM

சிட்னி டெஸ்டின் முதல் இன்னிங்சில் 10 ஓவர் மட்டும் வீசிய இவரது முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதால், பாதியில் 'பெவிலியன்' திரும்பினார். 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில் முதுகு தசைப்பிடிப்பு உறுதியானது. இதனால் நேற்று பேட்டிங் மட்டும் செய்த இவர், பந்துவீசவில்லை. இதனால் ஆஸ்திரேலியா எளிதாக வென்றது.
இதுகுறித்து பும்ரா கூறுகையில், ''அருமையான ஆடுகளத்தில் பந்துவீச முடியாமல் போனது ஏமாற்றம். இருப்பினும் சில சமயம், உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். போட்டியில் அசவுகரியத்தை உணர்ந்ததால் பாதியில் விலக நேரிட்டது. இத்தொடரில் நாங்கள் வெற்றியை எளிதில் விட்டுத்தரவில்லை. ஆஸ்திரேலிய வீரர்களும் வெற்றி பெற கடினமாக போராடினர்,'' என்றார்.
அணியில் மாற்றம்: காம்பிர் உறுதி
கடந்த ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக காம்பிர் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி பத்து டெஸ்டில், 3ல் மட்டும் வென்றது. சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 'ஒயிட்வாஷ்' ஆனது. அடுத்து, இந்திய அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுகிறது.
இதுகுறித்து காம்பிர் கூறுகையில், ''கோப்பை வெல்ல முடியாதது ஏமாற்றம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்காக கடைசி வரை போராடினோம். டெஸ்ட் அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து தற்போது பேச முடியாது. ஏனெனில் அடுத்த டெஸ்ட் தொடருக்கு இன்னும் 5-6 மாதம் உள்ளன. இக்காலகட்டத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அனைத்தும் அணியின் நன்மைக்காக மட்டுமே. இதற்கு முன் ஒவ்வொரு வீரரும் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும்,'' என்றார்.

