/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது இந்தியா * தென் ஆப்ரிக்க பெண்கள் தோல்வி
/
கோப்பை வென்றது இந்தியா * தென் ஆப்ரிக்க பெண்கள் தோல்வி
கோப்பை வென்றது இந்தியா * தென் ஆப்ரிக்க பெண்கள் தோல்வி
கோப்பை வென்றது இந்தியா * தென் ஆப்ரிக்க பெண்கள் தோல்வி
ADDED : ஜூலை 01, 2024 11:14 PM

சென்னை: சென்னை டெஸ்டில் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பை தட்டிச் சென்றது.
இந்தியா, தென் ஆப்ரிக்க பெண்கள் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 603/6 ('டிக்ளேர்') ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி 266 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 'பாலோ-ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாவது நாள் முடிவில் 232/2 ரன் எடுத்து, 105 ரன் பின்தங்கி இருந்தது.
நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தீப்தி சுழலில் காப் (31) அவுட்டாக, தேல்மி (0) 'டக்' அவுட்டானார். சதம் கடந்த லாராவை (122), ராஜேஸ்வரி வெளியேற்றினார்.
அன்னெரியே (5), துமி (6) அவுட்டான போதும், போட்டியை 'டிரா' செய்யும் நோக்கத்தில் மந்தமாக விளையாடினார் நாடின். இதனால் தென் ஆப்ரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. நாடின் 174வது பந்தில் அரைசதம் விளாசினார். இவர் 61 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 373 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் ஸ்னே ராணா, தீப்தி, ராஜேஸ்வரி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
எளிய வெற்றி
இரண்டாவது இன்னிங்சில் 37 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இந்தியா. ஷபாலி வர்மா, சுபா ஜோடி துவக்கம் கொடுத்தது. டக்கர் பந்தில் பவுண்டரி அடித்த ஷபாலி, அடுத்து சிக்சர் விளாச, இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 37 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
'ஹாட்ரிக்' வெற்றி
கடந்த ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வென்ற இந்திய பெண்கள் அணி, நேற்று தென் ஆப்ரிக்காவை சாய்த்து, டெஸ்ட் அரங்கில் இரண்டாவது முறையாக 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. முன்னதாக 2006-14ல் இதுபோல வெற்றி பெற்றிருந்தது.
தவிர ஆஸ்திரேலிய பெண்கள் அணி 3 முறை இதுபோல 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளது.
3
பெண்கள் அரங்கில் கேப்டனாக களமிறங்கிய முதல் மூன்று டெஸ்டிலும் வெற்றி பெற்றுத்தந்த முதல் வீராங்கனை ஆனார் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர்.
* அதிக டெஸ்டில் வென்ற இந்திய பெண்கள் அணி கேப்டன் என மிதாலி ராஜுடன் (3) சமன் செய்தார் ஹர்மன்பிரீத் கவுர் (3).
1279
இந்தியா (603/6, 37/0), தென் ஆப்ரிக்க (266/10, 373/10) அணிகள் இணைந்து 1,279 ரன் எடுத்தன. ஒரு டெஸ்டில் எடுக்கப்பட்ட அதிக ரன் வரிசையில் இது இரண்டாவது இடம் பெற்றது. இதற்கு முன் ஆஸ்திரேலியா (473/10, 257/10), இங்கிலாந்து (463/10, 178/10) போட்டியில் 1,371 ரன் எடுக்கப்பட்டன.