/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சென்னை அணிக்கு என்னாச்சு *தேறாத பேட்டிங், பந்துவீச்சு
/
சென்னை அணிக்கு என்னாச்சு *தேறாத பேட்டிங், பந்துவீச்சு
சென்னை அணிக்கு என்னாச்சு *தேறாத பேட்டிங், பந்துவீச்சு
சென்னை அணிக்கு என்னாச்சு *தேறாத பேட்டிங், பந்துவீச்சு
UPDATED : மே 10, 2024 11:57 PM
ADDED : மே 10, 2024 10:20 PM

ஆமதாபாத்: சுப்மன் கில், சாய் சுதர்சன் சதம் கைகொடுக்க, குஜராத் 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, குஜராத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
நிதான துவக்கம்
குஜராத் அணிக்கு சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி துவக்கம் கொடுத்தது. சான்ட்னர் வீசிய முதல் ஓவரில் சுப்மன் 4, 6 என அடித்தார். ஷர்துல், தேஷ்பாண்டே பந்துகளை சுதர்சன் சிக்சருக்கு அனுப்பிய போதும் முதல் 5 ஓவரில் குஜராத் 46/0 ரன் மட்டுமே எடுத்தது. இதன் பின் இருவரும் மின்னல் வேக ரன் குவிப்பை வெளிப்படுத்தினர்.
இரண்டு சதம்
ஜடேஜா ஓவரில் (9வது) சுதர்சன் 4, 6 என விளாச, குஜராத் அணி 10 ஓவரில் 107/0 ரன் சேர்த்தது. சிமர்ஜீத் வீசிய 11 வது ஓவரில் சுப்மன் 6, 4 ரன், சுதர்சன் தன் பங்கிற்கு 6, 6 ரன் என அடிக்க மொத்தம் 23 ரன் எடுக்கப்பட்டன. அடுத்து சான்ட்னர் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு அனுப்பி மிரட்டினார் சுதர்சன்.
மிட்செல் வீசிய போட்டியின் 14வது ஓவரில் மூன்று சிக்சர் அடித்தார் சுப்மன். சிமர்ஜீத் பந்தில் பவுண்டரி அடித்த சுப்மன், 50 வது பந்தில் சதம் எட்டினார். இதே ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்த சுதர்சன், 52வது பந்தில் சதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 210 ரன் சேர்த்த போது, தேஷ்பாண்டே வீசிய 17 வது ஓவரில் சுதர்சன் (103), சுப்மன் (104) என இருவரும் அவுட்டாகினர். குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன் குவித்தது.
சென்னை அணியை துவக்கத்தில் ரச்சின் (1), ரகானே (1), ருதுராஜ் (0) ஏமாற்றினர். மிட்செல் (63), மொயீன் அலி (56) அரைசதம் அடித்து கிளம்பினர். துபே (21), ஜடேஜா (18) நிலைக்கவில்லை. சென்னை அணி 20 ஓவரில் 196/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது. தோனி (26) அவுட்டாகாமல் இருந்தார்.
6
'டி-20' கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்களில் மூன்றாவது இடத்தை (தலா 6 சதம்) ருதுராஜ், ராகுல், சூர்யகுமாருடன் பகிர்ந்து கொண்டார் சுப்மன். முதல் இரு இடத்தில் கோலி (9), ரோகித் (8) உள்ளனர்.
13
ஐ.பி.எல்., அரங்கில் 2024 சீசனில் அதிகபட்சமாக இதுவரை 13 சதம் அடிக்கப்பட்டன. முன்னதாக 2023ல் 12, 2022ல் 8, 2016ல் 7 சதம் அடிக்கப்பட்டு இருந்தன.
25
ஐ.பி.எல்., அரங்கில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டிய வீரர்களில் முதல் இந்தியர் ஆனார் சுதர்சன் (25வது). சச்சின், ருதுராஜ் (தலா 31) அடுத்து உள்ளனர்.
* ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தை ஹைடனுடன் பகிர்ந்து கொண்டார் சுதர்சன் (இருவரும் 25). முதல் இரு இடத்தில் ஷான் மார்ஷ் (21), சிம்மன்ஸ் (23) உள்ளனர்.
210
சுப்மன், சுதர்சன் இணைந்து (210 ரன்) ஐ.பி.எல்., தொடரில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் எடுத்த குஜராத் ஜோடி என பெருமை பெற்றனர். முன்னதாக 2023ல் இந்த இருவரும் 147 ரன் (எதிர்-ஐதராபாத்) எடுத்திருந்தனர்.