/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சென்னை பக்கம் வருவாரா ரிஷாப் * ரெய்னா சூசகம்
/
சென்னை பக்கம் வருவாரா ரிஷாப் * ரெய்னா சூசகம்
ADDED : நவ 01, 2024 11:23 PM

சென்னை: சென்னை அணியில் ரிஷாப் பன்ட் இடம் பெறலாம் என ரெய்னா சூசகமாக தெரிவித்தார்.
ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசன், 2025ல் நடக்க உள்ளது. இம்மாத இறுதியில் வீரர்கள் 'மெகா' ஏலம் நடக்க இருக்கிறது. ஒரு அணி ரூ. 120 கோடி செலவிடலாம். ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்கவைக்கலாம்.
'காஸ்ட்லி' கிளாசன்
ஐதராபாத் அணி கிளாசனை அதிகபட்சமாக ரூ. 23 கோடிக்கு தக்க வைத்தது. அடுத்து கோலி (பெங்களூரு), பூரனுக்கு (லக்னோ) தலா ரூ. 21 கோடி கொடுக்கப்பட்டது. ரூ. 21 கோடியை தொட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் கோலி. கடந்த முறை ரூ 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க்கை, கோல்கட்டா அணி தக்க வைக்கவில்லை. நிர்வாகத்துடன் ஏற்பட்ட உரசல் காரணமாக டில்லி அணியில் இருந்து ரிஷாப் பன்ட் விடுவிக்கப்பட்டார்.
தோனியின் இடம்
சென்னை அணி கேப்டன் ருதுராஜ் (18 கோடி), ஜடேஜா (ரூ.18 கோடி), பதிரானா (ரூ.13 கோடி), துபே (ரூ. 12 கோடி), தோனியை (ரூ. 4 கோடி) தக்கவைத்தது. ஏலத்தில், ரிஷாப் பன்ட்டை வாங்க ஆர்வமாக உள்ளது. தோனி ஓய்வுக்கு பின் கீப்பர், பேட்டராக அணிக்கு கைகொடுப்பார். மேக்ஸ்வெல், முகமது ஷமியை வாங்க முயற்சிக்கலாம். தக்கவைத்த வீரர்களுக்காக சென்னை அணி, ரூ. 65 கோடி செலவு செய்துவிட்டது. மீதம் ரூ. 55 கோடி தான் உள்ளது.
பஞ்சாப் ஆசை
பெங்களூரு அணியும் ரிஷாப் மீது கண் வைத்துள்ளது. தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்தை நிரப்ப ரிஷாப் தேவைப்படுகிறார். ரூ. 83 கோடி மீதம் வைத்துள்ளது. பஞ்சாப் அணியின் பார்வையும் ரிஷாப் மீது விழுந்துள்ளது. இரு வீரர்களை ரூ. 9.5 கோடிக்கு தக்கவைத்தது. கைவசம் ரூ. 110.5 கோடி உள்ளது. 'பெட்டி' நிறைய பணத்துடன் பஞ்சாப் இருப்பதால், ரூ. 20-22 கோடி வரை கொடுத்து, ரிஷாப் பன்ட்டை வாங்க முயற்சிக்கும்.
டில்லி சந்திப்பு
இதனால், ரிஷாப் பன்ட்டை வாங்க கடும் போட்டி ஏற்படலாம். இவர், சென்னை பக்கம் தலைகாட்ட அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ரெய்னா சூசகமாக தெரிவித்தார். இவர் கூறுகையில்,''சமீபத்தில் டில்லியில் தோனியை சந்தித்தேன். அப்போது ரிஷாப் பன்ட் உடன் இருந்தார். பெரிய சம்பவம் நடக்க உள்ளது. விரைவில் ஒருவர் சென்னை அணியின் மஞ்சள் நிற ஜெர்சியை அணிய உள்ளார்,'' என்றார்.