/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அஷ்வினை ஏன் களமிறக்கவில்லை * ஹர்பஜன் சிங் விளாசல்
/
அஷ்வினை ஏன் களமிறக்கவில்லை * ஹர்பஜன் சிங் விளாசல்
ADDED : மே 01, 2025 11:35 PM

புதுடில்லி: ''பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அஷ்வின், ஜடேஜா, நுார் அகமது கூட்டணியுடன் களமிறங்கி இருந்தால், சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும்,'' என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப்பிடம் தோல்வியடைந்தது. முதன் முறையாக சொந்தமண்ணில் தொடர்ந்து 5 போட்டியில் தோற்றது. 2020, 2022, 2024க்குப் பின் மீண்டும் 'பிளே ஆப்' செல்லாமல் (4 முறை) வெளியேறியது. தவிர பிரிமியர் வரலாற்றில் முதன் முறையாக அடுத்தடுத்த ஆண்டு லீக் சுற்றுடன் திரும்பியது சென்னை.
துவக்கத்தில் மும்பையை வீழ்த்தி தொடரை வெற்றிகரமாக துவக்கிய சென்னைக்கு, கேப்டன் ருதுராஜ் காயத்தால் விலகியது அதிர்ச்சி. அனுபவ தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பேற்றதால் சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், பல வீரர்கள் 'பார்ம்' இல்லாமல் தடுமாறுவதால் வெற்றி என்பது எட்டாமல் போக, எட்டு தோல்வியுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இத்தொடருக்காக, அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை ரூ. 9.75 கோடிக்கு மீண்டும் வாங்கியது சென்னை. கடந்த 2008-15ல் சென்னை அணிக்காக விளையாடிய இவர், பத்து ஆண்டுகளுக்கு பின் சென்னை அணிக்கு களமிறங்கினார். 7 போட்டியில் 5 விக்கெட் மட்டும் சாய்க்க, சென்னை மண்ணில் கூட இவருக்கு வாய்ப்பு தரப்படுவது இல்லை.
ஹர்பஜன் கேள்வி
இதுகுறித்து சென்னை அணிக்காக விளையாடிய இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியது:
சென்னை அணி சூழ்நிலைக்கு தகுந்தவாறு அணியை தேர்வு செய்யவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அஷ்வின், ஜடேஜா, நுார் அகமது கூட்டணியுடன் களமிறங்கி இருந்தால், சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும்.
ஆனால் அஷ்வினை களமிறக்கவில்லை. இவரை 'பெஞ்ச்சில்' உட்கார வைப்பதற்கா, ரூ. 9.75 கோடி கொடுத்தீர்கள். இவர் ஏன் விளையாடவில்லை எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் அஷ்வின், யாரிடமாவது சண்டையிட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
சென்னை அணியில் அஷ்வின் மட்டுமல்ல, மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்படவில்லை. இவர்கள் இன்னும் களமிறங்கி விளையாடுகின்றனர். ஆனால் அஷ்வினை மட்டும் சேர்க்க மறுக்கின்றனர். ஆடுகளத்தில் பந்தில் நல்ல திருப்பம் ஏற்பட்ட நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிராக இவரை களமிறக்கி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வருகிறார் உர்வில்
அடுத்தடுத்த தோல்விகளால் சென்னை அணி நிர்வாகத்தின் பார்வை இளம் வீரர்கள் மீது திரும்பியுள்ளது போல. ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரவிஸ் வரிசையில் புதியதாக விக்கெட் கீப்பர் பேட்டர் உர்வில் படேலை (குஜராத்) அழைத்துள்ளது.
2023 பிரிமியர் தொடரில், உர்வில் (ரூ. 20 லட்சம்) குஜராத் அணியில் இருந்தார். ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல், விடுவிக்கப்பட்டார். விஜய் ஹசாரே (50 ஓவர்) போட்டியில், 41 பந்தில் 100 ரன் (எதிர்-சண்டிகர்) அடித்தார்.
கடந்த ஆண்டு (2024) சையது முஷ்தாக் 'டி-20' தொடரில் (2024) திரிபுராவுக்கு எதிராக 28 பந்தில் சதம் விளாசினார். அதிவேக 'டி-20' சதம் விளாசிய இந்தியர் ஆன இவர், மீண்டும் 36 பந்தில் சதம் (உத்தரகாண்ட) அடித்தார்.
இந்திய அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறுகையில்,'' சென்னை அணி தரப்பில், தகுதி முகாமில் பங்கேற்குமாறு உர்விலுக்கு அழைப்பு விடப்பட்டதாக தெரிகிறது. இவரை ஏலத்தில் யாரும் வாங்காதது, உர்விலுக்கு முன் ஆயுஷ் மாத்ரேவை தேர்வு செய்த விஷயங்கள் உண்மையில் வியப்பாக உள்ளது,'' என்றார்.
ஒரேநாளில் தகர்ந்த கோப்பை கனவு
பிரிமியர் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணில பஞ்சாப்பிடம் தோற்றது. இதுபோல ஆசிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதியில், முன்னணி வீரர் ரொனால்டோவின், அல் நாசர் அணி 2-3 என கவாசகி அணியிடம் தோற்றது.
'கன்காகப்' கால்பந்து அரையிறுதியில் நட்சத்திர வீரர் மெஸ்சியின் இன்டர் மயாமி அணி, வான்கூவர் அணியிடம் (1-5) தோற்றது. தோனி, ரொனால்டோ, மெஸ்சி என முன்னணி வீரர்களின் கோப்பை கனவு, ஒரே நாளில் தகர்ந்தது.