ADDED : ஜன 19, 2025 11:27 PM

புதுடில்லி: இந்தியாவின் ஜடேஜா, ரஞ்சி கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாட உள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 எனக் கோட்டைவிட்டது. இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும், உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ., கட்டாயமாக்கியது.
வரும் ஜன. 23ல் ராஜ்கோட்டில் துவங்கவுள்ள ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் சவுராஷ்டிரா, டில்லி அணிகள் விளையாட உள்ளன. இதில் சவுராஷ்டிரா அணி சார்பில் சீனியர் 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா களமிறங்க உள்ளார். இப்போட்டிக்காக ராஜ்கோட்டில் நடந்த சவுராஷ்டிரா அணி வீரர்களின் பயிற்சியில் ஜடேஜாவும் கலந்து கொண்டார்.
ஏற்கனவே இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட், சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரஞ்சி கோப்பையில் தங்களது அணிக்காக விளையாடுவதை உறுதி செய்தனர். இந்திய சீனியர் வீரர் விராத் கோலி மட்டும் காயத்தால் ரஞ்சி கோப்பையில் பங்கேற்கமாட்டார்.
சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் ஜெய்தேவ் ஷா கூறுகையில், ''ரஞ்சி கோப்பை போட்டிக்கான பயிற்சியை ஜடேஜா துவக்கிவிட்டார். இவர், அடுத்த போட்டியில் நிச்சயம் விளையாடுவார்,'' என்றார்.