ADDED : நவ 20, 2026 03:33 PM

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் ஜெய்ஸ்வால், ராகுல் அரைசதம் விளாசினர்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 243/5 ரன் எடுத்திருந்தது. நிக்கோல்ஸ் (113), பிலிப்ஸ் (94) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில், அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணியின் பிலிப்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 216 ரன் சேர்த்த போது, ஆகாஷ் தீப் 'வேகத்தில்' பிலிப்ஸ் (118) போல்டானார். மறுமுனையில் அசத்திய நிக்கோல்ஸ், 150 ரன்னை கடந்தார். நாதன் ஸ்மித் (14), கைல் ஜேமிசன் (11), மாட் ஹென்றி (1), ஜேக்கப் டபி (4) நிலைக்கவில்லை.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 368 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நிக்கோல்ஸ் (175) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா 4, ஆகாஷ் தீப் 3, அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்த போது மாட் ஹென்றி 'வேகத்தில்' ஜெய்ஸ்வால் (85) வெளியேறினார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 159/1 ரன் எடுத்து, 209 ரன் பின்தங்கி இருந்தது. ராகுல் (52), தேவ்தத் படிக்கல் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
