/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜெய்ஸ்வால் அசத்தல் சதம் * இந்திய அணி கலக்கல்
/
ஜெய்ஸ்வால் அசத்தல் சதம் * இந்திய அணி கலக்கல்
ADDED : பிப் 02, 2024 10:21 PM

விசாகப்பட்டனம்: விசாகப்பட்டனம் டெஸ்டில் ஜெய்ஸ்வால் சதம் விளாச, இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டியது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில்வென்ற இங்கிலாந்து 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நேற்று துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார்.
காயத்தால் விலகிய ராகுல், ஜடேஜாவுக்குப் பதில் பேட்டர் ரஜத் படிதர் அறிமுக வாய்ப்பு பெற, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் சேர்க்கப்பட்டார். முகமது சிராஜ் நீக்கப்பட்டு முகேஷ் குமார் களமிறங்கினார். இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷிர் அறிமுகம் ஆனார்.
துவக்க நம்பிக்கை
இந்திய அணிக்கு ரோகித், ஜெய்ஸ்வால் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜோ ரூட் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஜெய்ஸ்வால். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த போதும், 41 பந்தில் ஒரு பவுண்டரியும் அடிக்காத ரோகித் சர்மா (14), சோயப் பஷிரின் 'முதல்' விக்கெட்டாக வீழ்ந்தார்.
ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இணைந்தனர். ஆண்டர்சன் பந்தில் சுப்மன்(34) வீழ்ந்தார். டெஸ்டில் ஆண்டர்சன் பந்தில் ஐந்தாவது முறையாக அவுட்டானார்.
ஜெய்ஸ்வால் உறுதி
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இளம் வீரர் ஜெய்ஸ்வால். பஷிர் பந்துகளை அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரிக்கு அனுப்பினார்.
ஹார்ட்லே ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். 72 ரன்னில் ரூட் தயவில் தப்பிய ஜெய்ஸ்வால், மீண்டும் ஹார்ட்லே பந்தை சிக்சருக்கு விரட்டி, டெஸ்ட் அரங்கில் 2வது சதம் அடித்தார்.
ஸ்ரேயாஸ் அவுட்
ஸ்ரேயாஸ் (27) மீண்டும் ஏமாற்றம் தந்தார். ஜோ ரூட் பந்தில் இரு பவுண்டரி அடித்த அறிமுக வீரர் ரஜத் படிதர். இவர், 32 ரன் எடுத்த போது, ரேஹன் பந்தில் துரதிருஷ்டவசமாக போல்டானார். மறுபக்கம் 224 வது பந்தில் தனது 150வது ரன்னை எட்டினார். பஷிர் சுழலில் அக்சர் படேல் (27) அவுட்டானார்.
ரேஹன் பந்தில் விக்கெட் கீப்பர் பரத் (17) அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 336 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (179), அஷ்வின் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்தின் பஷிர், ரேஹன் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
இன்று இரண்டாவது நாளில் இந்திய பேட்டர்கள் கூடுதல் ரன் சேர்த்தால், இங்கிலாந்துக்கு நெருக்கடி தரலாம்.
179
நேற்று அசத்திய ஜெய்ஸ்வால், டெஸ்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை(179*) எட்டினார். முன்னதாக அறிமுக டெஸ்டில் 171 ரன்(எதிர், வெஸ்ட் இண்டீஸ், டொமினிக்கா, 2023) எடுத்திருந்தார்.
ஏமாற்றும் சுப்மன்
இந்தியாவின் சுப்மன் கில் தொடர்ந்து ஏமாற்றம் தருகிறார். கடைசி 12 டெஸ்ட் இன்னிங்சில் (13, 18, 6, 10, 29, 2, 26, 36, 10, 23, 0, 34) ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

