/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜெய்ஸ்வால் அசத்தல் சதம்: இந்தியா வலுவான முன்னிலை
/
ஜெய்ஸ்வால் அசத்தல் சதம்: இந்தியா வலுவான முன்னிலை
ADDED : பிப் 17, 2024 11:10 PM

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்டில் ஜெய்ஸ்வால் சதம் விளாச, இந்திய அணி வலுவான முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்திருந்தது. டக்கெட் (133), ரூட் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
டக்கெட் 153 ரன்
மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் போட்டுத் தாக்க, இங்கிலாந்து அணி அதிர்ந்தது. பும்ரா பந்தை ஜோ ரூட்(18) 'ரிவர்ஸ் ஸ்கூப்' செய்ய முற்பட, ஜெய்ஸ்வால் கச்சிதமாக பிடிக்க... பரிதாபமாக அவுட்டானார். இது, ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியது. அஷ்வின் இல்லாத குறையை போக்கிய குல்தீப் 'சுழலில்' பேர்ஸ்டோவ்(0) சிக்கினார். மீண்டும் பந்துவீச வந்த குல்தீப் இம்முறை 'ஆபத்தான' டக்கெட்(153 ரன், 151 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை வீழ்த்தி, உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். ஜடேஜா பந்தில் பும்ராவின் கலக்கல் 'கேட்ச்சில்' கேப்டன் ஸ்டோக்ஸ்(41) அவுட்டானார்.
விக்கெட் சரிவு
சிராஜ் 'வேகத்தில்' போக்ஸ்(13), ரேஹன் அகமது(6), ஆண்டர்சன்(1) உள்ளிட்ட 'டெயிலெண்டர்'கள் சரிந்தனர். கடைசி 5 விக்கெட்டுகள் வெறும் 29 ரன்னுக்கு பறிபோக, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 319 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 126 ரன் முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் சிராஜ் 4, குல்தீப் 2, ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினர்.
மீண்டும் சதம்
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா(19) ஏமாற்றினார். பின் ஜெய்ஸ்வால், சுப்மன் சேர்ந்து அசத்தினர். இங்கிலாந்து அணிக்கு, அவர்களது அதிரடியாக ரன் சேர்க்கும் 'பாஸ் பால்' பாணியில் பதிலடி கொடுத்தார் ஜெய்ஸ்வால். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கிய இவர், டெஸ்ட் அரங்கில் புதிதாக 'ஜெய்ஸ்பால்' பார்முலாவை உருவாக்கியுள்ளார். ஆண்டர்சன் ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். மார்க் உட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, இத்தொடரில் இரண்டாவது சதம் எட்டினார். மார்க் உட் ஓவரில் தன்பங்கிற்கு ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சுப்மன் கில், அரைசதம் கடந்தார். முதுகுபிடிப்பால் அவதிப்பட்ட ஜெய்ஸ்வால்(104 ரன், 133 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்), 44வது ஓவர் முடிவில் 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். இவர் தேவைப்பட்டால் மீண்டும் பேட் செய்ய களமிறங்கலாம். அடுத்து வந்த ரஜத் படிதார்(0) நிலைக்கவில்லை.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்து, 322 ரன் முன்னிலை பெற்றிருந்தது. சுப்மன்(65), குல்தீப்(3) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று இந்திய வீரர்கள் விரைவாக ரன் சேர்த்தால், இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கலாம்.
400 ரன்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலிக்கு(593 ரன், 2018) அடுத்து 400 ரன்னுக்கு மேல் எடுத்த இரண்டாவது இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால். தற்போதைய தொடரில் 2 சதம் உட்பட 6 இன்னிங்சில் 435 ரன் எடுத்துள்ளார்.
150 ரன்
இந்திய மண்ணில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிவேக 150 ரன் எடுத்த வீரரானார் இங்கிலாந்தின் டக்கெட்(139 பந்து). இதற்கு முன் சக வீரர் கெவின் பீட்டர்சன் 201 பந்தில் 150 ரன் (மும்பை, 2012) எடுத்திருந்தார்.
200 விக்கெட்
நேற்று ஸ்டோக்சை வெளியேற்றிய ரவிந்திர ஜடேஜா, சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் விக்கெட்டை(82 இன்னிங்ஸ்) பெற்றார். கும்ளே(350 விக்., 115 இன்னிங்ஸ்), அஷ்வின்(347 விக்., 112 இன்னிங்ஸ்), ஹர்பஜன்(265 விக்., 103 இன்னிங்ஸ்), கபிலுக்கு (219 விக்., 119 இன்னிங்ஸ்) அடுத்து இம்மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய பவுலரானார்.
அஞ்சலி
சமீபத்தில் மறைந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜி ராவ் கெய்க்வாட்டிற்கு 95, அஞ்சலி செலுத்தும்விதமாக நேற்று இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.