/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜோ ரூட் 34வது சதம்: இங்கிலாந்து வலுவான முன்னிலை
/
ஜோ ரூட் 34வது சதம்: இங்கிலாந்து வலுவான முன்னிலை
UPDATED : ஆக 31, 2024 11:13 PM
ADDED : ஆக 31, 2024 10:08 PM

லார்ட்ஸ்: ஜோ ரூட் மீண்டும் சதம் விளாச இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 427, இலங்கை 196 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 25/1 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் (37), ஜேமி ஸ்மித் (26) ஓரளவு கைகொடுத்தனர். ஜோ ரூட், லகிரு குமாரா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி டெஸ்ட் அரங்கில் தனது 34வது சதத்தை பதிவு செய்தார். இவர், 103 ரன்னில் அவுட்டானார்.
இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இலங்கை அணிக்கு 483 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை சார்பில் அசிதா, லகிரு குமாரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்கா (13), பதும் நிசங்கா (14) ஏமாற்றினர். இலங்கை அணி 2வது இன்னிங்சில் 53./2 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. திமுத் கருணாரத்னே (23), பிரபாத் ஜெயசூர்யா (3) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன், ஸ்டோன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
7 சதம்
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் அதிக சதம் விளாசிய இங்கிலாந்து வீரரானார் ஜோ ரூட். இதற்கு முன் இங்கு, கிரஹாம் கூச், மைக்கேல் வான் தலா 6 சதம் அடித்திருந்தனர்.
50 சர்வதேச சதம்
ஜோ ரூட், தனது 50வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார். டெஸ்டில் 34, ஒருநாள் போட்டியில் 16 என 50 சதம் அடித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 50 அல்லது அதற்கு மேல் சதம் விளாசிய 9வது வீரரானார். முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் சச்சின் (100), கோலி (80), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (71) உள்ளனர்.
6 சதம்
டெஸ்ட் அரங்கில் இலங்கைக்கு எதிராக அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 3வது இடத்தை பாகிஸ்தானின் அசார் அலியுடன் பகிர்ந்து கொண்டார் ஜோ ரூட். இருவரும் தலா 6 சதம் அடித்துள்ளனர். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் (9), பாகிஸ்தானின் யூனிஸ் கான் (8) உள்ளனர்.
4வது வீரர்
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரு டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய 4வது வீரரானார் ஜோ ரூட் (143, 103). ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் ஜார்ஜ் ஹெட்லி (106, 107, எதிர்: இங்கிலாந்து, 1939), இங்கிலாந்தின் கிரஹாம் கூச் (333, 123, எதிர்: இந்தியா, 1990), மைக்கேல் வான் (103, 101*, எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2004) இச்சாதனை படைத்திருந்தனர்.