/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கவாஜா இரட்டை சதம்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
/
கவாஜா இரட்டை சதம்: ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
ADDED : ஜன 30, 2025 10:17 PM

காலே: முதல் டெஸ்டில் கவாஜா இரட்டை சதம், ஜோஷ் இங்லிஸ் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 654 ரன் குவித்தது.
இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 330/2 ரன் எடுத்திருந்தது. கவாஜா (147), ஸ்மித் (104) ரன் எடுத்திருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் மூன்றாவது விக்கெட்டுக்கு 266 ரன் சேர்த்த போது ஸ்மித் (141) அவுட்டானார். அபாரமாக ஆடிய கவாஜா, டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 146 ரன் சேர்த்த போது பிரபாத் ஜெயசூர்யா பந்தில் கவாஜா (232) ஆட்டமிழந்தார். மறுமுனையில் அசத்திய அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஸ் (102), தன்பங்கிற்கு சதம் விளாசினார். வெப்ஸ்டர் (23) நிலைக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 654 ரன் குவித்து 'டிக்ளேர்' செய்தது. அலெக்ஸ் கேரி (46), ஸ்டார்க் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெப்ரி வான்டர்சே தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு ஓஷாடா பெர்னாண்டோ, திமுத் கருணாரத்னே, மாத்யூஸ் தலா 7 ரன்னில் வெளியேறினர். ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 44/3 ரன் எடுத்திருந்தது. சண்டிமால் (9), கமிந்து மெண்டிஸ் (13) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், குனேமன், லியான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
232 ரன்
பேட்டிங்கில் அசத்திய உஸ்மான் கவாஜா (232), இலங்கை மண்ணில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆனார். இதற்கு முன் ஜஸ்டின் லாங்கர் 166 ரன் (கொழும்பு, 2004) எடுத்தது இலங்கையில் ஆஸ்திரேலிய வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.
* தவிர டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார் கவாஜா. இதற்கு முன் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் (2023) 195* ரன் எடுத்ததே இவரது அதிகபட்ச ரன்னாக இருந்தது.