/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலி 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில்
/
கோலி 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில்
ADDED : ஜன 21, 2026 10:02 PM

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் கோலி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.
பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் விராத் கோலி, 795 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், நியூசிலாந்து தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 240 ரன் எடுத்திருந்தார். இந்தியாவுக்கு எதிராக 2 சதம் உட்பட 352 ரன் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற நியூசிலாந்தின் டேரில் மிட்சல் (845 புள்ளி), 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இவர், 2வது முறையாக முதலிடத்தை கைப்பற்றினார். இதற்கு முன், கடந்த நவம்பரில் முதலிடம் பிடித்திருந்தார்.
மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா (757) 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 61 ரன் மட்டும் எடுத்திருந்தார். இந்தியாவின் சுப்மன் கில் (723) 5வது இடத்தில் நீடிக்கிறார்.
பவுலர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (710), 'ஆல்-ரவுண்டர்' பட்டியலில் ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா உமர்ஜாய் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.

