/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஒரு ரன்னில் கோல்கட்டா வெற்றி: பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி
/
ஒரு ரன்னில் கோல்கட்டா வெற்றி: பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி
ஒரு ரன்னில் கோல்கட்டா வெற்றி: பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி
ஒரு ரன்னில் கோல்கட்டா வெற்றி: பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி
UPDATED : ஏப் 21, 2024 11:44 PM
ADDED : ஏப் 21, 2024 11:41 PM

கோல்கட்டா: பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. கடைசி பந்து வரை போராடிய பெங்களூருவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தியாவில் 17வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதின.
சால்ட் கலக்கல்
முதலில் பேட் செய்த கோல்கட்டா அணிக்கு பில் சால்ட் அதிரடி துவக்கம் தந்தார். பெர்குசன் ஓவரில் 28 ரன்(6, 4, 4, 6, 4, 4) விளாசினார். சிராஜ் 'வேகத்தில்' சால்ட்(48 ரன், 7 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். யாஷ் தயாள் ஓவரில் நரைன்(10), ரகுவன்ஷி(3) அவுட்டாக, முதல் 6 ஓவரில் கோல்கட்டா 3 விக்கெட்டுக்கு 75 ரன் எடுத்தது. வெங்கடேஷ்(16) சோபிக்கவில்லை.
ஸ்ரேயாஸ் அரைசதம்
கேப்டன் ஸ்ரேயாஸ் பொறுப்பாக ஆடினார். ரிங்கு சிங், 24 ரன் எடுத்தார். யாஷ் தயாள் ஓவரில் ரசல் ஒரு பவுண்டரி, ஸ்ரேயாஸ் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, 22 ரன் எடுக்கப்பட்டன. அரைசதம் எட்டிய ஸ்ரேயாஸ்(50), கிரீன் பந்தில் வெளியேறினார். பின் ரசல், ரமன்தீப் சிங் மிரட்டினர். சிராஜ் ஓவரில் ரமன்தீப் 2 சிக்சர், 1 பவுண்டரி விளாசினார். கடைசி 5 ஓவரில் 73 ரன் எடுக்கப்பட்டன. கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 222 ரன் எடுத்தது. ரசல்(27), ரமன்தீப்(24) அவுட்டாகாமல் இருந்தனர்.
படிதார் விளாசல்
கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கோலியின்(18) சர்ச்சைக்குரிய 'அவுட்' மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கேப்டன் டுபிளசி(7) நிலைக்கவில்லை. வில் ஜாக்ஸ், ரஜத் படிதர் துணிச்சலாக போராடினர். ஜாக்ஸ், 29 பந்தில் அரைசதம் எட்டினார். சுயாஷ் ஓவரில் படிதார் 22 ரன்(4, 6, 6, 2, 4) விளாசினார். நரைன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய படிதார், 21 பந்தில் அரைசதம் கடந்தார். 11 ஓவரில் பெங்களூரு 2 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்து வலுவாக இருந்தது.
திருப்பம் தந்த ரசல்
போட்டியின் 12வது ஓவரை வீசிய ரசல், முதல் பந்தில் ஜாக்ஸ்(55), 4வது பந்தில் படிதாரை(52) அவுட்டாக்கி திருப்பம் ஏற்படுத்தினார். நரைன் வீசிய அடுத்த ஓவரில் கிரீன்(6), லாம்ரார்(4) வெளியேறினர். பிரபுதேசாய் 24 ரன் எடுத்தார். ரசல் 'வேகத்தில்' தினேஷ் கார்த்திக்(25) அவுட்டானார்.
'சிக்சர்' கரண் சர்மா
கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டன. 'காஸ்ட்லி' வீரரான ஸ்டார்க் பந்துவீசினார். முதல் நான்கு பந்துகளில் கரண் சர்மா மூன்று சிக்சர்கள் பறக்கவிட, 'டென்ஷன்' எகிறியது. 5வது பந்தில் கரண்(20) அவுட்டானார். கடைசி ஒரு பந்தில் 3 ரன் தேவைப்பட்டன. பெர்குசன்(1) ரன் அவுட்டாக, பெங்களூரு அணி 20 ஓவரில் 221 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
பச்சை நிறமே...
உலகில் மரம் வளர்த்து பசுமையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று பெங்களூரு அணியினர் பச்சை நிற 'ஜெர்சி' அணிந்து விளையாடினர். நிறம் மாறியும் பலன் கிடைக்கவில்லை. 7வது தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. 'பிளே-ஆப்' செல்வது கடினம் தான்.

