/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'சுழல்' சூறாவளி வீசாதது ஏன்... * ரகசியம் சொல்கிறார் குல்தீப்
/
'சுழல்' சூறாவளி வீசாதது ஏன்... * ரகசியம் சொல்கிறார் குல்தீப்
'சுழல்' சூறாவளி வீசாதது ஏன்... * ரகசியம் சொல்கிறார் குல்தீப்
'சுழல்' சூறாவளி வீசாதது ஏன்... * ரகசியம் சொல்கிறார் குல்தீப்
ADDED : பிப் 13, 2024 11:02 PM

ராஜ்கோட்: ''கடந்த இரு டெஸ்டில் 'வேகங்கள்' சாதித்தனர். வரும் போட்டிகளில் 'சுழலுக்கு' சாதகமாக ஆடுகளம் அமைக்கப்படலாம்,'' என குல்தீப் யாதவ் தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெல்ல, தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் நாளை குஜராத்தின் ராஜ்கோட்டில் துவங்குகிறது. பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இம்முறை 'வேகங்கள்' மிரட்டுகின்றனர். ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவின் பும்ரா 6 (2+4) விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விசாகப்பட்டனம் போட்டியில் 9(6+3) விக்கெட் சாய்த்தார். இதனால் 'சுழல்' வீரர்கள் பங்கு குறைந்தது.
இது குறித்து இந்திய 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவ் கூறியது:
ரசிகர்கள் சிறப்பான கிரிக்கெட் போட்டியை பார்க்க வேண்டும் என்பதே இலக்கு. இதன் அடிப்படையில் ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. ஒருதலைபட்சமாக இருந்தால், போட்டியில் சுவாரஸ்யம் இருக்காது. சுழற்பந்துவீச்சு மட்டும் முக்கியமல்ல. பேட்டிங்கும் முக்கியம் தான். இதற்காக 700-800 ரன் ஸ்கோர் செய்யும் அளவுக்கு ஆடுகளம் மந்தமாக இருக்கக்கூடாது. கடந்த இரு போட்டிகளில் பும்ரா உள்ளிட்ட 'வேகங்கள்' சாதித்தனர். வரும் போட்டிகளில் சுழலுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்படலாம். ஆடுகளம் தொடர்பாக அணி நிர்வாகம் தான் இறுதி முடிவு எடுக்கும்.
இளமைக்கு வாய்ப்பு
டெஸ்டில் அதிரடியாக ரன் சேர்க்கும் இங்கிலாந்தின் 'பாஸ் பால்' திட்டம் புதுமையாக உள்ளது. இவர்களது ரன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இத்தகைய ஆட்டம் சில சமயத்தில் விரைவான விக்கெட் வீழ்ச்சிக்கும் வித்திடுகிறது. கோலி, ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறாத நிலையில், இளம் இந்திய நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூர் போட்டிகளில் அசத்திய இவர்கள், சர்வதேச அளவிலும் திறமை வெளிப்படுத்த வேண்டும். ரவிந்திர ஜடேஜா தொடை பகுதி காயத்தில் இருந்து தேறிவிட்டார். ராஜ்கோட் போட்டியில் விளையாட வாய்ப்பு உண்டு.
இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்
'விசா' பிரச்னை
அபுதாபியில் 10 நாள் ஓய்வு எடுத்த இங்கிலாந்து வீரர்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம் ராஜ்கோட் வந்தனர். இதில் 'ஸ்பின்னர்' ரேஹன் அகமது ஒற்றை- நுழைவு 'விசா' வைத்திருந்ததால், அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இவர் ஏற்கனவே இந்தியா வந்திருந்தார். 10 நாள் இடைவெளியில் மீண்டும் வந்ததால், சிக்கல் ஏற்பட்டது. இவருக்கு இரண்டு நாள் இடைக்கால 'விசா' வழங்கப்பட்டது. இதனால் ரேஹன் பயிற்சியில் ஈடுபடலாம். சக இங்கிலாந்து வீரர் போப் கூறுகையில்,''ராஜ்கோட் போட்டிக்கு முன் 'விசா' பிரச்னைக்கு தீர்வு காணப்படும். விமான நிலைய அதிகாரிகள் நிலைமையை புரிந்து கொண்டனர். இடைக்கால 'விசா' வழங்கி உதவினர்,''என்றார்.
100
ராஜ்கோட்டில் தனது 100வது டெஸ்டில் பங்கேற்கிறார் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் 32. கடந்த 2013ல் அறிமுகமான இவர், 99 டெஸ்டில் 6,251 ரன், 197 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரது தலைமையில் இங்கிலாந்து அணி, 21 டெஸ்டில் 14ல் வென்றுள்ளது.
500
அஷ்வின் 37, ராஜ்கோட் போட்டியில் ஒரு விக்கெட் சாய்த்தால், டெஸ்டில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டலாம். கும்ளேவுக்கு(132 போட்டி, 619 விக்.,) அடுத்து இம்மைல்கல்லை எட்டும் இரண்டாவது இந்திய பவுலராகலாம். 2011ல் அறிமுகமான அஷ்வின், இதுவரை 97 டெஸ்டில் 499 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
700
இங்கிலாந்தின் ஆண்டர்சன் 41, ராஜ்கோட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினால், 700 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளராகலாம். 2003ல் அறிமுகமான இவர், 184 டெஸ்டில் 695 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
பயிற்சியில் இந்திய வீரர்கள்
ராஜ்கோட்டில் நேற்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் ரோகித் சர்மா, பேட்டர் சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் ஜூரல், ரஜத் படிதார் 'பீல்டிங்', 'பேட்டிங்' பயிற்சி மேற்கொண்டனர். காயத்தில் இருந்து மீண்ட ரவிந்திர ஜடேஜா நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார். குல்தீப் யாதவ் உள்ளிட்ட பவுலர்களும் பயிற்சி செய்தனர். கடந்த போட்டியில் விரல் பகுதியில் காயம் அடைந்த சுப்மன் கில், பயிற்சியில் பங்கேற்கவில்லை.