/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அதிர்ஷ்டக்கார ரிஷாப் பன்ட்: ரூ. 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது
/
அதிர்ஷ்டக்கார ரிஷாப் பன்ட்: ரூ. 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது
அதிர்ஷ்டக்கார ரிஷாப் பன்ட்: ரூ. 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது
அதிர்ஷ்டக்கார ரிஷாப் பன்ட்: ரூ. 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது
ADDED : நவ 24, 2024 11:20 PM

ஜெட்டா: ஐ.பி.எல்., ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரரானார் ரிஷாப் பன்ட். இவரை ரூ. 27.00 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. மற்றொரு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்தது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 18வது சீசன், அடுத்த ஆண்டு மார்ச் 14ல் துவங்குகிறது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடக்கிறது.
சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. பத்து அணிகள் சார்பில் 46 பேர் தக்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு ரூ. 558.5 கோடி செலவிடப்பட்டது. இம்முறை 577 பேர் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். இதில், 204 வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்காக ரூ. 641.5 கோடி செலவிடப்படுகிறது.
முதலில், இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஏலத்தில் வந்தார். அடிப்படை ஏலத்தொகை ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்ட இவரை, சென்னை அணி முதலில் ஏலம் கேட்டது. அதன்பின் டில்லி, குஜராத், பெங்களூரு, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் விருப்பம் தெரிவித்தன. முடிவில் ஐதராபாத் அணி ரூ. 15.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தது. ஆனால் பஞ்சாப் அணி, 'ரைட் டூ மேட்ச்' கார்டை பயன்படுத்தியது. ஐதராபாத் அணி, இவருக்கு அதிகபட்ச தொகையாக ரூ. 18 கோடி நிர்ணயித்தது. இதற்கு சம்மதம் தெரிவித்ததால், ரூ. 18 கோடிக்கு பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் தக்கவைக்கப்பட்டார்.
பன்ட் வரலாறு: முன்னாள் கோல்கட்டா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை ஒப்பந்தம் செய்ய கோல்கட்டா, பஞ்சாப், டில்லி, பஞ்சாப் அணிகள் போட்டியிட்டன. முடிவில் பஞ்சாப் அணி ரூ. 26.75 கோடிக்கு தட்டிச் சென்றது. அதன்பின் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் ஏலத்தில் வந்தார். அடிப்படை ஏலத்தொகை ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்ட இவரை வாங்க லக்னோ, பெங்களூரு, ஐதராபாத் அணிகள் முன்வந்தன. முடிவில் இவருக்கு ரூ. 20.75 கோடி கொடுக்க லக்னோ அணி தயாராக இருந்தது. அப்போது டில்லி அணி 'ரைட் டூ மேட்ச்' கார்டை பயன்படுத்தியது. லக்னோ அணி, இவருக்கு அதிகபட்சம் ரூ. 27 கோடி கொடுக்க முன்வந்தது. டில்லி அணி விலகிக் கொள்ள, ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியில் இணைந்தார் ரிஷாப் பன்ட். இதன்மூலம் ஐ.பி.எல்., ஏல வரலாற்றில் அதிக விலைக்கு ஒப்பந்தமான வீரரானார்.
வெங்கடேசுக்கு மவுசு: இந்திய சுழற்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் ஐயரை வாங்க கோல்கட்டா, லக்னோ, பெங்களூரு அணிகள் போட்டியிட்டன. முடிவில் கோல்கட்டா அணி ரூ. 23.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. மற்ற இந்திய வீரர்களான யுவேந்திர சகால் (ரூ. 18 கோடி, பஞ்சாப்), லோகேஷ் ராகுல் (ரூ. 14 கோடி, டில்லி), முகமது சிராஜ் (ரூ. 12.25 கோடி, குஜராத்), இஷான் கிஷான் (ரூ. 11.25 கோடி, ஐதராபாத்), ஜிதேஷ் சர்மா (ரூ. 11 கோடி, பெங்களூரு), நடராஜன் (ரூ. 10.75 கோடி, டில்லி), முகமது ஷமி (ரூ. 10 கோடி, ஐதராபாத்), அவேஷ் கான் (ரூ. 9.75 கோடி, லக்னோ), பிரசித் கிருஷ்ணா (ரூ. 9.50 கோடி, குஜராத்), ஹர்ஷல் படேல் (ரூ. 8 கோடி, ஐதராபாத்), ராகுல் சகார் (ரூ. 3.20 கோடி, ஐதராபாத்) பல்வேறு அணிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
பட்லர் அமோகம்
நேற்றைய ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களான இங்கிலாந்தின் பட்லர் (ரூ. 15.75 கோடி, குஜராத்), பில் சால்ட் (ரூ. 11.50 கோடி, பெங்களூரு), லிவிங்ஸ்டன் (ரூ. 8.75 கோடி, பெங்களூரு), ஹாரி புரூக் (ரூ. 6.25 கோடி, டில்லி), ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (ரூ. 12.50 கோடி, பெங்களூரு), ஸ்டார்க் (ரூ. 11.75 கோடி, டில்லி), ஸ்டாய்னிஸ் (ரூ. 11 கோடி, பஞ்சாப்), ஜேக் பிரேசர்-மெக்குர்க் (ரூ. 9 கோடி, டில்லி), மேக்ஸ்வெல் (ரூ. 4.20 கோடி, பஞ்சாப்), மிட்சல் மார்ஷ் (ரூ. 3.40 கோடி, லக்னோ), ஆடம் ஜாம்பா (ரூ. 2.40 கோடி, ஐதராபாத்), தென் ஆப்ரிக்காவின் ரபாடா (ரூ. 10.75 கோடி, குஜராத்), டேவிட் மில்லர் (ரூ. 7.50 கோடி, லக்னோ), குயின்டன் டி காக் (ரூ. 3.60 கோடி, கோல்கட்டா), மார்க்ரம் (ரூ. 2 கோடி, லக்னோ), நியூசிலாந்தின் பவுல்ட் (ரூ. 12.50 கோடி, மும்பை), இலங்கையின் மகேஷ் தீக்சனா (ரூ. 4.40 கோடி, ராஜஸ்தான்), வணிந்து ஹசரங்கா (ரூ. 5.25 கோடி, ராஜஸ்தான்), ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் (ரூ. 2 கோடி, கோல்கட்டா) பல்வேறு அணிகளில் ஒப்பந்தமாகினர்.
விலை போகாத வீரர்கள்
முதல் நாள் ஏலத்தில் தேவ்தத் படிக்கல் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸி.,), பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து), வக்கார் சலாம்கெயில் (ஆப்கன்) ஆகியோரை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை.