ADDED : ஜூன் 07, 2026 11:28 PM

புதிய சண்டிகர்: அறிமுக டெஸ்டில் மானவ் சுதார் அபாரமாக பந்துவீச, இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, புதிய சண்டிகரில் (பஞ்சாப்) உள்ள மஹாராஜா யதவிந்திர சிங் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 368/3 ரன் எடுத்திருந்தது.
வாஷிங்டன் அரைசதம்: இரண்டாவது நாள் ஆட்டத்தில் முகமது சலீம் 'வேகத்தில்' கேப்டன் சுப்மன் கில் (126 ரன்) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய சலீம் பந்தில் துருவ் ஜுரல் (19) போல்டானார். ஹஷ்மதுல்லா பந்தில் ரிஷாப் பன்ட் (81) வெளியேறினார். கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார் அசத்தினர். ஹஷ்மதுல்லா பந்தை சுதார் சிக்சருக்கு அனுப்ப, இந்தியா 500 ரன்னை எட்டியது. மானவ் சுதாரை (28) அவுட்டாக்கிய சலீம், தனது 5வது விக்கெட்டை பெற்றார். கரோட்டே ஓவரில் சிராஜ் வரிசையாக 6,4,4 என விளாசினார். சலீம் பந்தில் சிராஜும் (22) போல்டானார். சலீம் ஓவரில் தொடர்ந்து ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த வாஷிங்டன், டெஸ்டில் 6வது அரைசதம் கடந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சை 564/8 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. வாஷிங்டன் (52), குல்தீப் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
மானவ் 3 விக்கெட்: பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, அறிமுக மானவ் சுதார் 'சுழலில்' அதிர்ந்தது. தனது முதல் ஓவரின் 4வது பந்தில் அப்துல் மாலிக்கை (16) அவுட்டாக்கி, டெஸ்டில் முதல் விக்கெட்டை பெற்றார். பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' செதிக்குல்லா (17) 'பெவிலியன்' திரும்பினார். இது, இந்திய மண்ணில் இவரது முதல் டெஸ்ட் விக்கெட். மானவ் வலையில் குர்பாஸ் (12) சிக்கினார். கேப்டன் ஹஷ்மதுல்லா (20) நிலைக்கவில்லை. மானவ் பந்தில் அப்சர் ஜசாய் (3) நடையை கட்டினார்.
இரண்டாவது நாள் ஆட்ட முடிவில், ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 113/5 ரன் எடுத்து, 451 ரன் பின்தங்கியிருந்தது. ரஹ்மத் ஷா (43) அவுட்டாகாமல் இருந்தார். இன்று எஞ்சிய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தும் பட்சத்தில், ஆப்கானிஸ்தானுக்கு 'பாலோ-ஆன்' கொடுக்கப்படலாம்.
இந்தியா சார்பில் மானவ் சுதார், 3 விக்கெட் வீழ்த்தினார்.
பிராட்மேன்...சுப்மன்
டெஸ்ட் கேப்டனாக சிறந்த பேட்டிங் சராசரி (குறைந்தது 1000+ ரன்) பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில் (1076 ரன், சராசரி 82.8) 2வது இடம் பெற்றார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் (3147 ரன், சராசரி 101.5) உள்ளார்.
* சுப்மன் கில்-ரிஷாப் பன்ட் 4வது விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்தனர். இது தான் இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிபட்ச ரன்.
மூன்றாவது வீரர்
டெஸ்டில் 5+ விக்கெட் வீழ்த்திய மூன்றாவது ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளரானார் முகமது சலீம் (6/140, எதிர், இந்தியா, 2026). முதல் இரு இடங்களில் ஜியவுர் ரஹ்மான் (7/97, எதிர், ஜிம்ப்., 2025), நிஜாத் (5/79, எதிர், வங்கம், 2023) உள்ளனர்.
* டெஸ்டில் 1000 ரன் எட்டிய முதல் ஆப்கன் வீரரானார் ரஹ்மத் ஷா.
இது அதிகம்
டெஸ்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை இந்தியா (564/8) பதிவு செய்தது. முதலிடத்தில் ஜிம்பாப்வே எடுத்த 586 ரன் (புலவாயோ, 2024) உள்ளது.
* டெஸ்டில் 500+ ரன் எடுத்த இன்னிங்சில், நேற்று இந்தியா தனது இரண்டாவது சிறந்த ரன் ரேட்டை (4.44, 564/8 டிக்ளேர்) பதிவு செய்தது. முதலிடத்தில் 4.50 ரன் ரேட் (600 ரன்னில் ஆல் அவுட், எதிர், இலங்கை, 2017) உள்ளது.
கவாஸ்கர் பாராட்டு
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அசத்தினார் மானவ் சுதார். இவரது 'புட்வொர்க்' சிறப்பாக இருந்தது. உறுதியுடன் ரன் சேர்த்தார். துல்லியமாக பந்துவீசி ஆப்கன் அணியை திணறடித்தார். அறிமுக போட்டியில் நம்பிக்கை தந்துள்ளார். டெஸ்ட் அரங்கில் ஜொலிக்கக் கடிய வீரராக அடையாளம் காட்டியுள்ளார்,''என்றார்.
கனவு நனவானது
ராஜஸ்தானை சேர்ந்த இடது கை 'ஸ்பின்னர்' மானவ் சுதார், 23, அறிமுக போட்டியில் முத்திரை பதித்துள்ளார். 15.5 ஓவரில் 7 மெய்டன் உட்பட 21 ரன் மட்டும் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். இவர் கூறுகையில்,''உள்ளூர் போட்டியில் சிறப்பாக பந்துவீசியதால், இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது. எனது கனவு நனவாகியுள்ளது. பந்தை நன்கு சுழற்றி துல்லியமாக வீசுவதே எனது பலம். இதே முறையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பந்துவீசினேன். ஆடுகளமும் ஒத்துழைத்தது,''என்றார்.
மானவ் தந்தை ஜெகதிஷ் சுதார் கூறுகையில்,''மானவ் ஆட்டத்தை காண ராஜஸ்தானில் இருந்து குடும்பத்தினருடன் புதிய சண்டிகர் வந்தேன். நேற்று முன் தினம் இந்திய அணியின் அறிமுக தொப்பியை மானவ் அணிந்த தருணத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நேற்று பந்துவீசுவதை மைதானத்தில் இருந்து நேரடியாக பார்க்க பதட்டமாக இருந்தது. இதனால் வீடு திரும்பி விட்டோம். மானவ் வளர்ச்சிக்கு கடின பயிற்சியே காரணம்,''என்றார்.
ரிஷாப் விளாசிய சிக்சர்
'டிரோன்' கேமரா உடைந்ததா...
முதல் டெஸ்டில் ஆப்கானிஸ்தானின் ஹஷ்மதுல்லா பந்தை ரிஷாப் பன்ட் சிக்சருக்கு துாக்கி அடிக்கிறார். நல்ல உயரத்தில் சென்ற பந்து, போட்டியை படம் பிடித்த 'டிரோன் கேமரா' மீது மோதுகிறது. இதனால், பறந்து கொண்டிருந்த 'டிரோன் கேமரா' அப்படியே கீழே விழுகிறது. இந்த 'வீடியோ' நேற்று சமூகவலைதளங்களில் 'வைரல்' ஆனது. டெஸ்டில் சிவப்பு பந்து தான் பயன்படுத்தப்படும். ஆனால், 'வீடியோ'வில் வெள்ளை நிற பந்து காண்பிக்கப்பட்டது. உண்மையை ஆய்வு செய்ததில், இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி 'வீடியோ' பரப்பியுள்ளனர்.
