ADDED : மார் 18, 2024 10:56 PM

புதுடில்லி: பெண்கள் பிரிமியர் தொடரில்  ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி முதன்முறையாக கோப்பை வென்றது. இதே போல ஐ.பி.எல்., தொடரில் கோலியின் பெங்களூரு அணியும் சாதிக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெண்களுக்கான பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் பைனலில் அசத்திய பெங்களூரு அணி, டில்லியை வீழ்த்தி கோப்பை வென்றது. கடந்த முறை 'பிளே-ஆப்' சுற்றுக்கு கூட தகுதி பெறாத பெங்களூரு அணி, இம்முறை சாதித்தது பெரிய விஷயம். இதற்கு கேப்டன் மந்தனா, ஸ்ரேயங்கா போன்ற வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு முக்கிய காரணம்.
மறுபக்கம் ஆண்களுக்கான ஐ.பி.எல்., தொடரில் 16 ஆண்டுகளாக பங்கேற்கும் பெங்களூரு அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. 2009(எதிர், டெக்கான்), 2011(எதிர், சென்னை), 2016(எதிர், ஐதராபாத்) என மூன்று பைனலில் தோற்றது. 2011ல் சாம்பியன்ஸ் லீக் பைனலில் மும்பையிடம் தோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் 'கிங்' கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும் சாதிக்க முடியவில்லை. கோப்பை வென்ற மந்தனா உள்ளிட்ட அணியினரை 'வீடியோ' அழைப்பு மூலம் வாழ்த்தினார் கோலி.
மந்தனா கூறுகையில்,'' தன்னம்பிக்கையுடன் போராடி சாதித்துள்ளோம். இந்தியாவை சேர்ந்த கேப்டன் வெல்ல வேண்டும் என நினைத்தேன். இது நடந்து விட்டது. கோலி நிறைய சாதித்துள்ளார். கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவானாக திகழ்கிறார். உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி வென்றுள்ளார். கிரிக்கெட் லீக் தொடர்களில் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. நாங்கள் வென்றுள்ள கோப்பை, பெங்களூரு ஆண்கள் அணிக்கும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என நம்புகிறேன்,''என்றார்.

