/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மழையால் போட்டி பாதியில் ரத்து
/
மழையால் போட்டி பாதியில் ரத்து
ADDED : மே 05, 2025 11:32 PM

ஐதராபாத்: டில்லி, ஐதராபாத் அணிகள் மோதிய பிரிமியர் லீக் போட்டி மழையால் பாதியில் ரத்தானது.
ஐதராபாத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ஐதராபாத், டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
விக்கெட் சரிவு: டில்லி அணிக்கு, ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் தொல்லை தந்தார். ஆட்டத்தின் முதல் பந்தில் கருண் நாயரை (0) அவுட்டாக்கினார். இவரது 'வேகத்தில்' டுபிளசி (3), அபிஷேக் போரெலும் (8) வெளியேறினர். கேப்டன் அக்சர் படேல் (6), லோகேஷ் ராகுல் (10) சோபிக்கவில்லை. டில்லி அணி 29 ரன்னுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து திணறியது.
ஆறுதல் ஜோடி: பின் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகாம் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. ஜீஷான் அன்சாரி வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் விப்ராஜ். நிதானமாக ஆடிய ஸ்டப்ஸ், ஹர்ஷல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 33 ரன் சேர்த்த போது விப்ராஜ் (18) 'ரன்-அவுட்' ஆனார். 'இம்பாக்ட்' வீரர் அஷுதோஷ் சர்மா, ஜீஷான் அன்சாரி வீசிய 15வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். தொடர்ந்து அசத்திய இவர், ஹர்ஷல் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். டில்லி அணி 16.5 ஓவரில் 100 ரன்னை கடந்தது.
எஷான் மலிங்கா வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஸ்டப்ஸ். ஹர்ஷல் பந்தில் ஒரு சிக்சர் விளாசிய அஷுதோஷ் (41), 7வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்த நிலையில் அவுட்டானார். எஷான் மலிங்கா வீசிய கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஸ்டப்ஸ்.
டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது. ஸ்டப்ஸ் (41), ஸ்டார்க் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
நழுவிய வாய்ப்பு: ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 20 ஓவரில், 134 ரன் தேவைப்பட்டது. ஆனால் மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நின்ற பின் மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஐதராபாத் அணி 11 போட்டியில், 3 வெற்றி உட்பட 7 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள 3 போட்டியில் வென்றால் கூட 13 புள்ளி மட்டுமே பெறும். இதனையடுத்து ஐதராபாத் அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது.